கிறிஸ்துவ மதத்தை பரப்புகிறார் என தந்தை மீது புகார்.. மைதானத்தில் பதிலடி தந்து ஜெமிமா பைபிள் வசனம்
மும்பை: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறது. தொடர்ந்து 15 போட்டிகளில் உலக கோப்பையில் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 338 ரன்கள் குவித்தது.
இதுவரை மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் இவ்வளவு பெரிய இலக்கை எந்த அணியுன் ஷேஸ் செய்தது கிடையாது. இந்த தருணத்தில் இந்திய அணி பேட்டிங் செய்தது. இதில் இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

மைதானத்தில் வெற்றிக்கு பிறகு பேசிய ஜெமிமா தமது பேச்சை தொடங்கும் முன்பு இந்த வெற்றியைத் தந்த இயேசுவுக்கு நன்றி எனக் கூறி பைபிளில் இடம்பெற்றுள்ள ஒரு வசனத்தை குறிப்பிட்டு, நீ களத்தில் நில்.. உனக்காக இறைவன் சண்டை செய்வார் என குறிப்பிட்டு இருந்தார். சரியாக 12 மாதங்களுக்கு முன் ஜெமிமா தந்தையான இவான் ரோட்ரிக்ஸ் மும்பை ஜிம்கானாவில் உள்ள கட்டிடத்தை பயன்படுத்தி கிறிஸ்துவ மதத்தை பரப்பும் முயற்சியில் ஈடுபட்டார் என்ற புகார் எழுந்தது.
இதனை அடுத்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் ஜிம் கானா மைதானத்தில் ஜெமிமாவுக்கு வழங்கப்பட்டிருந்த உறுப்பினர் அட்டை திரும்பப் பெறப்பட்டது. இது ஜெமிமாவின் வாழ்க்கையில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளாத ஜெமிமா சரியாக 12 மாதங்கள் கழித்து இந்தியாவுக்காக வரலாற்று சிறப்புமிக்க ஒரு இன்னிங்ஸை பாடி அணியை இறுதி போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அது மட்டுமில்லாமல் எந்த குற்றச்சாட்டை சொல்லி அவரது உரிம அட்டையை திரும்ப பெற்றார்களோ, அதற்கு பதில் அளிக்கும் விதமாக பைபிள் வசனத்தை அவர் பேசி பதிலடி கொடுத்திருக்கிறார். 25 வயதான ஜெமிமா இதுவரை 58 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 1725 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் மூன்று சதம், 8 அரை சதம் அடங்கும். இதே போன்று இந்தியாவுக்காக 112 டி20 போட்டிகளில் விளையாடி 2375 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் 13 அரை சதம் அடங்கும். இந்திய அணிக்காக மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் ஜெமிமா விளையாடி மொத்தமாக மூன்று அரை சதம் அடித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications