மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இந்தியாவை அரையிறுதியில் எதிர்கொள்ள உள்ளது. இந்த நிலையில் ஐந்து முறை உலக சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய அணி பைனலுக்கு எவ்வாறு வந்தது? லீக் சுற்றில் எத்தனை போட்டிகளில் வெற்றி பெற்றது? என்ன மாதிரி சவால்களை எதிர்கொண்டது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
இந்த உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி தங்களுடைய முதல் போட்டியில் இந்தியாவை தான் எதிர்கொண்டது. சென்னையில் நடைபெற்ற இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 199 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனை எடுத்து களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும், கே.எல் ராகுலின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா வெற்றியை பெற்றது.

அதன் பிறகு பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்காவை ஆஸ்திரேலியா எதிர் கொண்டது. இதில் தென்னாப்பிரிக்கா 311 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா 127 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. தொடர்ந்து இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா தோல்வியை தழுவியதால் ரசிகர்கள் அந்த அணி மீது நம்பிக்கை இழந்தனர். எனினும் புத்துணர்வு பெற்ற ஆஸ்திரேலியா தங்களுடைய சாம்பியன் ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
தங்களுடைய மூன்றாவது ஆட்டத்தில் இலங்கையை எதிர்கொண்டு அந்த அணியை 209 ரன்களில் சுருட்டி 35 ஓவர்களில் எல்லாம் அந்த இலக்கை எட்டியது. தங்களுடைய நான்காவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி பலம் வாய்ந்த பாகிஸ்தானை எதிர் கொண்டது. இதில் ஆஸ்திரேலிய அணி 367 ரன்கள் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
அதன் பிறகு பாகிஸ்தான் அணி அபாரமாக விளையாடினாலும் 350 ரன்களில் சுருண்டு தோல்வியை தழுவியது. இதனை அடுத்து தங்களது ஐந்தாவது லீக் ஆட்ட்த்தில் நெதர்லாந்தை ஆஸ்திரேலியா எதிர்கொண்டு 399 ரன்கள் குவித்தது. அதன் பிறகு நெதர்லாந்தை 90 ரன்களில் எல்லாம் சுருட்டி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.தர்மசாலாவில் ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் மோதிய ஆட்டம் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது.
இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 388 ரன்கள் குவிக்க அந்த இலக்கை அருகில் வரை நியூசிலாந்து துரத்தி வெறும் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தான் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. தங்களுடைய 8வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. இதில் ஆஸ்திரேலியா 286 ரன்கள் மட்டுமே எடுக்க இங்கிலாந்து அணியை 253 ரன்கள் எல்லாம் சுருட்டி வெற்றியை கண்டது.
இந்த உலகக்கோப்பை தொடரில் யாருமே எதிர்பார்க்காத வகையில் ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தான் மோதிய ஆட்டம் இருந்தது. இதில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 291 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா பேட்டிங் செய்யும்போது 91 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்தது. இதனை அடுத்து மேக்ஸ்வெல் இரட்டை சதம் விளாச ஆஸ்திரேலியா மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலிய அணி தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொண்டது. இதில் வங்கதேச அணி 306 ரன்கள் சேர்க்க அந்த இலக்கை 45 ஓவர்களில் எல்லாம் ஆஸ்திரேலிய அணி எட்டியது. தற்போது அரையிறுதி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை 212 ரன்களில் ஆஸ்திரேலியா சுருட்டி, அதனை 16 பந்துகள் எஞ்சிய நிலையில் வென்றது. இதன் மூலம் இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியா தகுதி பெற்று இருக்கிறது. இந்த உலகக்கோப்பை தொடரில் முதல் இரண்டு லீக் ஆட்டத்தில் தோல்வியை தழுவிய ஆஸ்திரேலிய அணி அதன் பிறகு தொடர்ந்து எட்டு போட்டிகளில் வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.