மும்பை: இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மும்பையில் நடக்கவுள்ள நிலையில், காற்று மாசு அதிகரித்துள்ளது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நாளைய ஆட்டத்தில் இந்திய அணியை எதிர்த்து இலங்கை அணி விளையாடவுள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி மும்பை வான்கடே மைதானத்தில் முதல்முறையாக களமிறங்கவுள்ளது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 6 போட்டிகளிலும் வென்று அரையிறுதி சுற்றில் ஒரு கால் பதித்துவிட்டது. இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றால் நிச்சயம் அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பு உறுதி செய்யப்படும்.

இதனால் நாளை இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, மும்பை நகரில் காற்று மாசு அதிகரித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, விமானத்தில் பயணித்த போது எடுத்த புகைப்படத்தில் நகரையே காற்று மாசு மறைந்திருந்தது. அதனை பகிர்ந்த மும்பையில் என்ன நடக்கிறது என்ற வகையில் இன்ஸ்டாகிராமில் கேள்வி எழுப்பி இருந்தார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடும் போட்டிகளின் இடையே மைதானத்திற்கு வந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் பட்டாசுகள் வெடித்து வான வேடிக்கை காட்டப்பட்டு வருகிறது. புனே, தரம்சாலா, லக்னோ உள்ளிட்ட மைதானங்களில் நடத்தப்பட்ட வான வேடிக்கை வீடியோகள் சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே ட்ரெண்டாகியது. இந்த நிலையில் மும்பையில் காற்று மாசு அதிகரித்துள்ளதால், வான வேடிக்கை நடத்தப்பட வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது மும்பை மைதானத்தில் ரசிகர்களுக்காக நடத்தப்படும் வான வேடிக்கை நடத்தப்படாது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜெய் ஷா பேசுகையில், சுற்றுச்சூழல் பிரச்சனைகளை பிசிசிஐ உணர்ந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து ஐசிசியிடம் கொண்டு சென்றுள்ளோம். இதன் காரணமாக மும்பையில் வான வேடிக்கை உள்ளிட்டவை நடத்தப்படாது. ரசிகர்கள், மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் நலனே முக்கியம்.
மும்பை போட்டியின் போது பட்டாசு வெடித்து வான வேடிக்கை நடத்தினால், அது நிச்சயம் காற்று மாசை அதிகரிக்கும். மும்பை மட்டுமல்லாமல் டெல்லியிலும் காற்று மாசு அதிகமிருப்பதை ஒப்புக் கொள்கிறோம். இதனால் சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பட்டாசுகள் வெடிக்கப்படாது என்று தெரிவித்துள்ளார்.