மும்பை : உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி பிசிசிஐ தேர்வு செய்துள்ள 15 பேர் கொண்ட அணியில் குறைகள் என்ன நிறைகள் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
பிசிசிஐ தேர்வு குழு தலைவர் அஜித் அகார்கர், ரோகித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட வீரர்களை அறிவித்திருக்கிறார். இது உலக கோப்பையை வெல்லும் அளவுக்கு பலமான அணியா? இந்திய அணியில் இருக்கும் பிரச்சனைகள் குறித்து தற்போது பார்க்கலாம்.

12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதனால் இந்தியா சாம்பியன் பட்டத்தை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். விராட் கோலி, ரோகித் சர்மா, கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா ஸ்ரேயாஸ் ஐயர், கில், சூரியகுமார், இஷான் கிஷன் என பலம் வாய்ந்த வீரர்கள் அணியில் உள்ளனர். இவர்கள் அனைவரும் இந்திய ஆடுகளத்தில் சிறப்பாக விளையாடக் கூடியவர்கள்.
மேலும் பந்துவீச்சிலும் முகமது சிராஜ், சமி, பும்ரா ஆகியோர் இருக்கிறார்கள். இந்திய ஆடுகளம் என்றாலே சுழற் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான சூழல் இருக்கும் என எதிர்பார்க்கும் நிலையில் ஜடேஜா குல்திப் யாதவ், அக்சர் பட்டேல் என வீரர்கள் இருப்பதும் இந்தியாவுக்கு பலமாக தான் கருதப்படுகிறது. இந்த அணியில் நிறை மற்றும் பலம் என பார்த்தோம் என்றால் அது வீரர்களின் அனுபவம் மட்டும்தான்.
இந்த நிலையில் இந்த அணியில் உள்ள குறைகளை தற்போது பார்க்கலாம். டாப் ஏழு வீரர்கள் இருக்கும் அணியில் ஜடேஜா மட்டும்தான் இடது கை பேட்ஸ்மேனாக இருக்கிறார். இரண்டாவது இடது கை பேட்ஸ்மேனாக இஷான் கிசனை சேர்க்க வேண்டும் என்றால் ஸ்ரேயாஸ் ஐயர் அல்லது ராகுல் ஆகியோர்களின் ஒருவர் பிளேயிங் வெவனில் இருந்து வெளியே உட்கார வேண்டும்.
மேலும் 50 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பந்துவீச்சாளர் என்றால் அது ஆப்ஸ் ஸ்பின்னர் மற்றும் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் தான். இந்த இரண்டுமே இந்திய அணியில் தற்போது இல்லை. 2011 ஆம் ஆண்டு உலக கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு மேலே சொன்ன இரண்டும் முக்கிய காரணம் வகித்தது. ஆனால் தற்போது உள்ள அணியில் இவ்விரண்டுமே இல்லாதது பெரிய மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது. இதற்காக அஸ்வின் அல்லது வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்க வேண்டும் என பலரும் விடுத்த கோரிக்கையை தேர்வுக்குழு நிராகரித்திருக்கிறது.