2023 உலககோப்பை கிரிக்கெட் தொடர் -வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ்.. தகுதி சுற்றில் ஸ்காட்லாந்துடன் தோல்வி
ஹராரே : 2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தகுதி பெறும் வாய்ப்பை வெஸ்ட் இண்டீஸ் அணி இழந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஹராரேவில் நடைபெற்ற சூப்பர் 6 சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணி, ஸ்காட்லாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிக்கரமாக அமைந்தது.

சார்லஸ், புருக்ஸ் ஆகியோர் டக் அவுட்டாக கேப்டன் சாய் ஹோப் 15 ரன்களிலும், கையில் மெயர்ஸ் 5 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர். அதிரடியாக விளையாட முற்பட்ட பிராண்டன் கிங் 5 பவுண்டரிகளை விளாசி 22 ரன்கள் விளாசிய நிலையில் ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிக்கோலஸ் பூரானும் 21 ரன்களில் வெளியேற, வெஸ்ட் இண்டீஸ் அணி 81 ரன்கள் சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது.
ஜேசன் ஹோல்டர் தனி ஆளாக நின்று அணியை சரிவிலிருந்து மீட்டனர். ஹோல்டர் 45 ரன்களிலும், ரோமியோ ஷெப்பர்ட் 36 ரன்களும் சேர்க்க, வெஸட் இண்டீஸ் அணி 181 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணியும் ஆட்டத்தின் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தது.
ஆனால் 2வது விக்கெட்டுக்கு ஜோ சேர்ந்த மேத்தீவ் கிராஸ் மற்றும் பிராண்டன் மெக்குல்லம் ஜோடி பொறுப்புடன் விளையாடி பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடக்க ஜார்ஜ் முன்ஷி 18 ரன்களில் வெளியேறினார்.
இதனையடுத்து ஸ்காட்லாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 43.3 வது ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் 2 முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி, உலக கோப்பை தொடரில் தகுதி பெறாமல் வெளியேறியது.


Click it and Unblock the Notifications