உலகக்கோப்பை தகுதி சுற்று.. மைதான கண்ணாடி உடைந்தது.. வெஸ்ட் இண்டீஸ் வீரர் போவெல் வெறிச் செயல்
ஹராரே : உலகக் கோப்பை தகுதி சுற்றுப்போட்டிகள் தற்போது ஜிம்பாப்வே வில் நடைபெற்று வருகிறது. இதில் 10 அணிகள் இரண்டு சுற்றுகளாக விளையாடுகிறது.
இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி நேபாளை எதிர்கொண்டது. டாஸ் வென்ற நேபாள அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் கையில் மெயர்ஸ் ஒரு ரன்னிலும் ஜான்சன் சார்லஸ் டக் அவுட் ஆகியும் வெளியேறினர்.

பிராண்டின் கிங் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 32 ரன்கள் சேர்த்தார். இதனை அடுத்து சாய் ஹோப் மற்றும் நிக்கோலோஸ் பூரான் ஜோடி அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து சதங்களை விளாசினார்கள். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஸ்கோர் உயர்ந்தது. இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரோமன் போவேல் களத்திற்கு வந்தார்.
14 பந்துகளை எதிர்கொண்ட அவர் 29 ரன்களை குவித்தார். இதில் மூன்று பவுண்டர்களும் ஒரு இமாலய சிக்சரும் அடங்கும். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 207 என்ற அளவில் இருக்கிறது. ரோமன் போவேல் அடித்த ஒரு பந்து மைதானத்தில் இருந்த கண்ணாடியை அடித்து நொறுக்கியது. எனினும் அங்கு இருந்தவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.

இதனைத் தொடர்ந்து போவேல் 14 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இறுதியில் ஜேசன் ஹோல்டர் பத்து பந்துகளில் 16 ரன்கள் எடுக்க வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் எடுத்துள்ளது. இந்தப் பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாப் 3 இடத்தை பிடித்தால் சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெறும்.
அங்கு எதிர் அணியிலிருந்து டாப் மூன்று இடத்தை பிடித்த அணிகளுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி பலப்பரீட்சை நடத்தும். முடிவில் சூப்பர் சிக்ஸ் சுற்றில் யார் இரண்டு இடங்களை பிடித்திருக்கிறார்களோ அவர்கள் உலகக்கோப்பை சுற்றுக்கு தகுதி பெறுவார்கள். இரண்டு உலகக் கோப்பையை பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியும் 1996 உலகக் கோப்பை வென்ற இலங்கை அணியும் மெயின் சுற்றில் தகுதி பெற வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications