மெல்போர்ன் : 2021 முதல் 2023 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் பிளேயிங் லெவனில் தேர்வு செய்துள்ளது. இதில் மூன்று இந்தியர்கள் மட்டுமே இடம்பெற்று இருக்கிறார்கள்.
அதில் இந்தியாவின் டாப் வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா,பும்ரா, கில் ஆகியோர் இடம்பெறவில்லை. ஆனால் இவர்களை தவிர பிளேயிங் லெவனில் மூன்று வீரர்கள் இடம் பெற்று இருக்கிறார்கள். அது யார் என்று தற்போது பார்க்கலாம்.

உலக டெஸ்ட் அணியில் தொடக்க வீரராக ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவஜாவும், இலங்கை அணியின் கருணரத்னேவும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். தொடக்க வீரராக சிறப்பாக செயல்பட்ட ரோகித்,கில் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. இதேபோன்று மூன்றாவது வீரராக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் இடம்பெற்றுள்ளார். அவர் 14 போட்டிகளில் 1500 ரன்கள் மேல் அடித்து இருக்கிறார்.
இதனை தொடர்ந்து இந்த பட்டியலில் நான்காவது வீரராக ஜோ ரூட் இடம் பெற்றிருக்கிறார். அவர் 22 டெஸ்ட் போட்டியில் விளையாடி 1915 ரன்கள் அடித்திருக்கிறார். இதன் மூலம் இந்த தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார். நடு வரிசையில் புஜாரா, கோலி என எந்த இந்திய வீரர்களும் இடம்பெறவில்லை. அதற்கு பதிலாக ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் ட்ராவிஸ் ஹெட் சேர்க்கப்பட்டிருக்கிறார். இதேபோன்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இந்தியாவின் அதிரடி வீரர் ரிஷப் பன்ட் இடம் பெற்றுள்ளார்.

7வது மற்றும் 8வது இடத்திற்கு இந்தியாவின் சுழற் பந்துவீச்சாளர்களான ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.மூன்று வேகப்பந்து வீச்சாளராக ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ், இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன், தென்னாப்பிரிக்கா வீரர் ரபாடா ஆகியோர் சிறந்த பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ளனர். இதில் பும்ராவுக்கும் இடம் கிடைக்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ் நியூசிலாந்து ஆகிய அணியில் இருந்து யாரும் இந்த சிறந்த பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
