லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன. லண்டன் ஓவல் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.
இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மேகமூட்டமாக இருந்ததாலும், ஆடுகளத்தில் புற்கள் அதிக அளவு இருந்ததாலும், இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததாக ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய அணியின் பிளேயிங் லெவனில் தமிழக விரர் அஸ்வின் இடம்பெறவில்லை. இந்திய அணி ஜடேஜா மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோரை வைத்து களமிறங்குகிறது. 3 வேகப்பந்துவீச்சாளராக சிராஜ், ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோரை தேர்வு செய்துள்ளது.
இதே போன்று விக்கெட் கீப்பராக கேஎஸ் பரத்துக்கு தான் வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. அஸ்வின் போன்ற தலைச்சிறந்த வீரருக்கு வாய்ப்பு வழங்க முடியாதது துரதிர்ஷ்டவசமானது என்றும், கள சூழலுக்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
இதே போன்று ரஹோனே போன்ற அனுபவ வீரர் அணிக்கு திரும்பி இருப்பது, அணிக்கு கூடுதல் பலத்தை கொடுத்திருப்பதாகவும், முதலில் பந்துவீசி ஆஸ்திரேலிய அணியை நெருக்கடிக்கு உள்ளாக்க முயல்வோம் என்று ரோகித் சர்மா கூறினார். இதனைத் தொடர்ந்து பேசிய பாட் கம்மின்ஸ், தாமும் முதலில் பந்துவீச தான் நினைத்தேன். எனினும் தற்போது இந்தியா தான் கடைசியில் பேட்டிங் செய்யும் என்பதால், சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும் என்றும் அவர் கூறினார்.