லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.
வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. எனினும் இந்திய அணியில் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களும் பந்துவீச்சாளர்களும் இருப்பதால் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பே இல்லை என்றும் சொல்லிவிட முடியாது.

இந்த நிலையில் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம். ஐபிஎல் தொடரில் செம பார்மில் இருக்கும் கில் தொடக்க வீரராக களமிறங்குவார். அவருக்கு துணையாக கேப்டன் ரோகித் சர்மா ஜோடியாக விளையாடுவார். மூன்றாவது வீரராக அனுபவம் வாய்ந்த புஜாரா விளையாடுவார். நான்காவது வீரராக விராட் கோலியும், ஐந்தாவது வீரராக முன்னாள் துணை கேப்டன் ரகானேவும் விளையாட உள்ளனர்.
ஆறாவது வீரராக கே.எஸ்.பரத்துக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இதுவே பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளமாக இருந்தால் இஷான் கிஷன் விளையாட வாய்ப்புள்ளது. ஆடுகளம் கொஞ்சம் காய்ந்த நிலையில் இருந்தால் இந்திய அணி இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடும். ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் 7 மற்றும் எட்டாவது இடத்தில் விளையாட கூடும்.
இதேபோன்று மூன்று வேக பந்துவீச்சாளர் பட்டியலில் முகமது சமி, முகமது சிராஜ் மற்றும் சர்துல் தாக்கூர் அல்லது உமேஷ் யாதவ் ஆகியோர் இடம்பெற வாய்ப்பு இருக்கிறது. இதில் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தால் அஸ்வினை நீக்கிவிட்டு அந்த இடத்தில் ஷர்துல் தாக்கூர் விளையாட அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த பிளேயிங் லெவனை வைத்து தான் இந்திய அணி கிட்டத்தட்ட களம் இறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.