இந்திய அணியை காப்பாற்றுமா மழை? வானிலை அறிக்கை இதோ.. எதிராக திரும்பவும் வாய்ப்பு இருக்கு
லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தோல்வியின் விளிம்பில் இருக்கிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 469 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி 296 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இதனை அடுத்து 173 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸிலும் ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் ஆஸ்திரேலியா அணி 400 ரன்களுக்கு மேல் இலக்கை நிர்ணயித்து இந்தியாவுக்கு பேட்டிங் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் லண்டனில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை நிலவரம் தெரிவிக்கிறது. இதனால் போட்டி ரிசர்வ் டே வரை நடைபெற வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை மழை அதிகமாக பெய்து ஆட்டம் தடைப்பட்டால் ரிசர்வ் டேவில் கூட இந்திய அணி போட்டியை டிரா செய்ய போராடலாம். அவ்வாறு ஆட்டம் சமனில் முடிந்தால் இரு அணிகளுக்கும் கோப்பை பகிர்ந்து வழங்கப்படும்.
எனினும் மழை எந்த அளவிற்கு உறுதியாக பெய்யும் என்று அதன் சதவீத அளவு தெரியவில்லை. ஆனால் இந்த வானிலை நிலவரம் இந்தியாவுக்கு எதிராகவும் அமைய வாய்ப்பு இருக்கிறது. வெயில் அடிக்கும் நிலையில் ஆடுகளம் தற்போது பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கிறது. இதுவே மழை காரணமாக வானம் மேகமூட்டத்துடன் இருந்தால் அப்போது பேட்டிங் செய்ய மிகவும் கடினமாக இருக்கும்.
இதனால் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பந்து வீசும் போது அவர்களுக்கு கூடுதல் பலமாக இருக்கும். இது இந்திய அணிக்கு பெரும் சவாலாக மாறிவிடும். மேலும் மழை பெய்தால் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்காது. இதனால் நாதன் லயன் ஆபத்திலிருந்து இந்தியா தப்பித்து விடும். இந்திய அணி தோல்வி அடையும் தருவாயில் இருப்பதால் இம்முறை மழை காப்பாற்றுமா என்று ரசிகர்களும் நினைக்கத் தொடங்கி விட்டார்கள்.


Click it and Unblock the Notifications