மும்பை: ஆஃப்கானிஸ்தான் டி20 தொடரில் சிவம் துபேவின் அபார ஆட்டம் காரணமாக, இனி இளம் வீரர் திலக் வர்மாவின் இடத்திற்கு பாதிப்பு இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய திலக் வர்மா, அடுத்த நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடரிலேயே இந்திய அணிக்காக அறிமுகமானார். ஐபிஎல் தொடரின் போதே திலக் வர்மாவை பாராட்டிய ரோகித் சர்மா, அவர் விரைவில் இந்திய அணியின் அனைத்து வடிவத்திற்குமான வீரராக இருப்பார் என்று கூறினார்.

அதன்பின் ஆசிய கோப்பை தொடரில் கூட தேர்வு செய்யப்பட்ட திலக் வர்மா, உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணி ஆடிய ஆஸ்திரேலியா டி20 தொடர், தென்னாப்பிரிக்கா டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் பெரிதாக சோபிக்கவில்லை. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் மட்டும் தான் சஞ்சு சாம்சனுடன் இணைந்து ஒரு அரைசதம் அடித்தார்.
இந்த நிலையில் ஆஃப்கானிஸ்தான் டி20 தொடரில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்கிய போது திலக் வர்மாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவருக்கு பதிலாக சிஎஸ்கே அணியின் வீரரான சிவம் துபே நம்பர் 4 வரிசையில் களமிறங்கி அசத்தினார். 3 போட்டிகளில் சேர்த்து 124 ரன்கள் மற்றும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகன் விருதை தட்டி சென்றார் சிவம் துபே.
அதுமட்டுமல்லாமல் டி20 உலகக்கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா மைதானங்களை ஒப்பிடும் போது அதிகளவில் ஸ்பின்னர்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் வரும். அதனால் திலக் வர்மாவை காட்டிலும் சிவம் துபேவை இந்திய அணியை தேர்வு செய்யவே வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.
அதற்கு அவரின் பவுலிங் செய்யும் திறமையும் முக்கிய காரணம். ஏனென்றால் ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு பவுலருக்கு பந்துவீச்சு எடுபடவில்லை என்றால், அவருக்கு பதிலாக சிவம் துபேவை அட்டாக்கில் கொண்டு வர முடியும். ஆஃப்கானிஸ்தான் டி20 தொடரில் சிவம் துபேவை 3வது வேகப்பந்துவீச்சாளராக ரோகித் சர்மா பயன்படுத்தி இருந்தார். இதனால் இனி திலக் வர்மா இந்திய அணிக்குள் வருவது சந்தேகம் தான் என்று பார்க்கப்படுகிறது.