மும்பை: இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் டி20 கிரிக்கெட் எதிர்காலம் குறித்த இறுதி முடிவை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா எடுப்பார் என்று தெரிய வந்துள்ளது.
அண்மையில் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வந்த போது, திடீரென தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் தென்னாப்பிரிக்கா சென்றார். இந்த பயணத்திற்கு காரணம் என்ன என்று ரசிகர்கள் பலரும் குழம்பினர். அப்போது, ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் ஆகியோரின் டி20 கிரிக்கெட் நிலைப்பாடு என்ன என்பதை அறியவே பயணம் என்று தெரிய வந்தது.

இதன்பின் 2 சீனியர் வீரர்களுடனான பேச்சுவார்த்தையின் முடிவில், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவருமே டி20 கிரிக்கெட்டை விளையாட தயாராக இருப்பதாக கூறியதாக கூறப்பட்டது. இதனால் டி20 அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவின் மனநிலை மற்றும் ஒன்றரை ஆண்டுகளாக டி20 அணியில் ஆடி வந்த இளம் வீரர்களின் நிலை என்னவென்பது கேள்வியாக அமைந்தது.
ஏனென்றால் ரோகித் சர்மாவின் கம்பேக்கால் ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் உள்ளிட்டோரின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் மும்பை அணியின் கேப்டன்சியை இழந்த ரோகித் சர்மா, தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரை வென்று மீண்டும் கேப்டன்சியை நிரூபித்துள்ளார்.
ஐபிஎல் தொடரிலும் பேட்டிங் உச்சக்கட்ட ஃபார்மில் இருந்தால், பிசிசிஐ-க்கு வேறு வழி கிடையாது. இதன் மூலம் டி20 உலகக்கோப்பை தொடருக்கும் இந்திய அணி கேப்டனாக ரோகித் சர்மா நியமனம் செய்ய வேண்டிய நிலை வரும். அதேபோல் விராட் கோலியும் சேர்க்கப்படும் பட்சத்தில் இந்திய அணியின் டாப் ஆர்டரில் ஒரு இடதுகை பேட்ஸ்மேன் கூட விளையாட வாய்ப்பில்லாத நிலை உருவாகும்.
இதன் காரணமாகவே ஆஃப்கானிஸ்தான் டி20 தொடருக்கான இந்திய அணியை அறிவிக்க பிசிசிஐ திண்டாடி வருகிறது. விராட் கோலி, ரோகித் சர்மாவை சேர்த்தால், ஒன்றரை ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்ட அணி மற்றும் திட்டங்கள் அனைத்தையும் மாற்ற வேண்டும். இதனால் விவகாரத்தை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவிடம் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரின் எதிர்காலம் குறித்தும் ஜெய் ஷாவே முடிவு எடுக்கவுள்ளார். ஏற்கனவே ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டதற்கு பின் ஜெய் ஷாவின் முடிவு இருப்பதாக பார்க்கப்பட்டு வந்த நிலையில், நட்சத்திர வீரர்களின் விவகாரத்தில் ஜெய் ஷா என்ன செய்வார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.