IND vs AFG: ரோஹித் சர்மா புதிய வரலாறு.. இன்னும் ஒரு மேட்ச் ஆடினால் சச்சினை தாண்டிய ODI ரெக்கார்டு
தர்மசாலா: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ள இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் ரோஹித் சர்மா, 37 ஆண்டுகால சாதனையை முறியடித்து புதிய வரலாற்று மைல்கல்லை எட்ட உள்ளார். இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் நாளை (சனிக்கிழமை, ஜூன் 13) தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் களமிறங்குவதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் விளையாடும் மிக வயதான இந்திய வீரர் என்ற புதிய வரலாற்றுச் சாதனையை ரோஹித் சர்மா படைக்கவுள்ளார். இதற்கு முன்னதாக இந்த சாதனை 1983 உலகக் கோப்பை இறுதிப்போட்டியின் ஆட்டநாயகனான மொஹிந்தர் அமர்நாத் வசம் இருந்தது.

அவர் கடந்த 1989 அக்டோபர் 30 அன்று மும்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தனது கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடிய போது அவருக்கு 39 வயது 36 நாட்கள் ஆகும். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆடும் பட்சத்தில் ரோஹித் சர்மாவுக்கு 39 வயது 44 நாட்கள் ஆகும் என்பதால், அமர்நாத்தின் 37 ஆண்டுகால சாதனையை அவர் முறியடிக்க உள்ளார்.
உலக அளவில் ஒருநாள் போட்டியில் விளையாடிய மிக வயதான வீரர் என்ற சாதனை நெதர்லாந்தின் நோலன் கிளார்க் (47 வயது 257 நாட்கள்) வசம் உள்ளது. அவருக்கு அடுத்தபடியாக ஜிம்பாப்வேயின் ஜான் டிரைகோஸ் (45 வயது 312 நாட்கள்), இங்கிலாந்தின் நார்மன் கிஃபோர்ட் (44 வயது 361 நாட்கள்) ஆகியோர் உள்ளனர்.
இதுமட்டுமின்றி, ஆப்கானிஸ்தான் தொடரில் ரோஹித் சர்மா சதம் விளாசினால், ஒருநாள் கிரிக்கெட்டில் சதம் அடித்த மிக வயதான இந்திய வீரர் என்ற புதிய சாதனையும் அவர் படைப்பார். தற்போது இந்த சாதனை சச்சின் டெண்டுல்கர் வசம் உள்ளது. அவர் 2012ஆம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிராக தனது 49வது ஒருநாள் சதத்தை விளாசிய போது அவருக்கு 38 வயது 327 நாட்கள் ஆகும்.


Click it and Unblock the Notifications
