IND vs AFG: ரஷித் கான் மாயாஜால பந்துவீச்சு.. அரைசதத்தை தவறவிட்ட ரோகித்..நடப்பாண்டில் அதிகபட்ச ஸ்கோர்
லக்னோ: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், ரஷித் கானின் அபாரமான கூக்ளி பந்தில் போல்டான இந்திய அணியின் மூத்த பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா, அரைசதம் அடிக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார். லக்னோவில் உள்ள ஏகானா ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில், 'ஹிட்மேன்' ரோஹித் சர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பெரிய ஸ்கோரை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். ஆனால், 39 பந்துகளில் 48 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவர் ஆட்டமிழந்து வெளியேறினார்.
ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலேயே பவுண்டரியுடன் தனது கணக்கைத் தொடங்கிய ரோஹித் சர்மா, ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தினார். அடுத்தடுத்து சிக்ஸர்களைப் பறக்கவிட்டு தனது அதிரடியைக் காட்டிய அவர், ஷுப்மன் கில்லுடன் இணைந்து வலுவான பார்ட்னர்ஷிப்பை அமைத்து முதல் பவர்பிளேயை வெற்றிகரமாகக் கடந்தார்.

இந்திய அணி முதல் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுக்க ரோஹித்தின் அதிரடி ஆட்டம் முக்கியக் காரணமாக அமைந்தது. இது நடுவரிசை பேட்ஸ்மேன்களுக்கு ஒரு சிறந்த அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.ஆப்கானிஸ்தான் அணி நங்யால் கரோட்டி மற்றும் ரஷித் கான் ஆகியோரின் சுழற்பந்து வீச்சை இருமுனைகளிலும் பயன்படுத்தியபோது, ரோஹித் சர்மா ரன்களை மாற்றி விட்டு நிதானமாக விளையாடினார்.
ரஷித் அபார பவுலிங்
அவர் தனது அரைசதத்தை நெருங்கிய வேளையில், 14-வது ஓவரின் முதல் பந்தில் ரஷித் கான் ஒரு மேஜிக் பந்தை வீசினார். லெக் ஸ்பின்னரான ரஷித் கான் வீசிய கூக்ளி பந்து சரியாக லேண்டாகி உள்ளே திரும்பியது. இதை கணிக்கத் தவறிய ரோஹித் சர்மா, பேக்ஃபுட்டில் ஆட முயன்று கிளீன் போல்டானார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நியூசிலாந்துக்கு எதிரான உள்நாட்டுத் தொடரில் சோபிக்காத ரோஹித், தர்மசாலாவில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் துரதிர்ஷ்டவசமாக 16 ரன்களுக்கு ரன் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார். இந்தச் சூழலில், இன்றைய ஆட்டத்தில் அவர் எடுத்த 48 ரன்களே 2026-ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அவரது அதிகபட்ச ஸ்கோராகப் பதிவாகியுள்ளது.
இந்தியாவின் ரன் குவிப்பு
ரோஹித் சர்மா ஆட்டமிழந்த பிறகு, இந்திய அணி 14-வது ஓவரில் 96 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து, ஷுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் ஜோடி களத்தில் இணைந்தது. இந்த இடது-வலது கை பேட்டிங் ஜோடி ரன் வேகத்தைக் குறையாமல் பார்த்துக் கொண்டது. இருவரும் இணைந்து 47 பந்துகளில் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். லேட்டஸ்ட் நிலவரப்படி, இந்திய அணி 21 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.


Click it and Unblock the Notifications

