பெங்களூரு: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் சூப்பர் ஓவரின் போது, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ரிட்டையர்ட் அவுட்டான சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைக்கப்பட்டு பரபரப்பாக முடிவடைந்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 69 பந்துகளில் 121 ரன்களும், ரிங்கு சிங் 39 பந்துகளில் 69 ரன்களும் சேர்த்தனர்.

தொடர்ந்து களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி குல்புதீன் நைப்-ன் அதிரடியான ஆட்டத்தால், 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் சேர்த்தது. கடைசி பந்தில் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், குல்புதீன் 2 ரன்களை மட்டுமே சேர்த்தார். இதனால் ஆட்டம் சமனில் முடிவடைந்து, வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ரன்களை சேர்த்தது. இதையடுத்து இந்திய அணி தரப்பில் ரோகித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் கூட்டணி களமிறங்கியது. முதல் 2 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்ட நிலையில், பின்னர் வீசப்பட்ட 3 மற்றும் 4 ஆகிய பந்துகளில் அடுத்தடுத்து சிக்சரை விளாசி அசத்தினார் ரோகித் சர்மா.
இதனால் கடைசி 2 பந்துகளில் இந்திய அணியின் வெற்றிக்கு 3 ரன்கள் தேவையாக இருந்தது. அப்போது ரோகித் சர்மா ஒரு ரன் எடுக்க, கடைசி பந்தில் இந்திய அணி வெற்றிபெற 2 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்ட்ரைக்கில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருந்த நிலையில், எதிர்முனையில் ரோகித் சர்மா இருந்தார். அப்போது ரோகித் சர்மா திடீரென நடுவரிடம் கூறிவிட்டு, பெவிலியன் நோக்கி நடந்தார்.
இதையடுத்து வர்ணனையில் ரோகித் சர்மா ரிட்டையர்ட் அவுட்டாகி வெளியேறியதாக கூறப்பட்டது. 2 ரன்களை விரைவாக ஓடி எடுக்க முடியாது என்பதால், ரோகித் சர்மா வெளியேறினார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரோகித் சர்மா ரிட்டையர்ட் அவுட் முறையில் வெளியேறுவது இதுவே முதல்முறையாகும். இதன் மூலம் அவரின் ஃபிட்னஸ் பற்றி விவாதங்களை அவரே எழுப்பியுள்ளார்.