டி20 உலக கோப்பை சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து இருப்பது ரசிகர்களை சோகம் அடைய செய்திருக்கிறது. அமெரிக்க ஆடுகளங்களில் இந்திய அணி வீரர்கள் மிகவும் தடுமாறி வெற்றிகளை பெற்றனர்.
இந்த சூழலில் வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என கருதப்பட்டது. இந்த சூழ்நிலையில் டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ஆடுகளம் தோய்வாக மாறும் என்பதால் முதலில் பேட்டிங் செய்து பெரிய இலக்கை குவிக்க வேண்டிய சூழலில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.இந்த நிலையில் கேப்டன் ரோகித் சர்மாவும் விராட் கோலியும் களமிறங்கினர். ரோகித் சர்மா இந்த தொடரில் அயர்லாந்துக்கு எதிராக அரைசதம் அடித்தாலும் பாகிஸ்தானுக்கு எதிராக 13 ரன்கள், அமெரிக்கா அணிக்கு எதிராக 3 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இந்த நிலையில் விராட் கோலி பார்மில் இல்லாமல் தவித்து வந்த நிலையில் ரோகித் சர்மாவுக்கு மிகப்பெரிய பொறுப்பு இருந்தது.
ஆனால் வழக்கம்போல் பந்து பேட்டிற்கு வரவில்லை. அதனால் ரோகித் சர்மா 13 பந்துகளை பிடித்து ஒரே ஒரு பவுண்டரி மட்டும் அடித்த நிலையில் 8 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
இதனால் இந்திய அணி 11 ரன்கள் சேர்ப்பதற்குள் முதல் விக்கெட்டை இழந்தது. இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற வீரர்கள் தொடர்ந்து தடுமாறி வருவது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. கடந்த உலக கோப்பையில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணமே தொடக்க ஜோடி அதிரடியாக விளையாடவில்லை என்று கூறப்பட்டது.
இதனால் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் புதிய ஜோடியாக இந்த உலகக் கோப்பை தொடரில் களமிறங்கி இருக்கிறார்கள். ஆனால் ரோகித் சர்மா தொடர்ந்து சொதப்பி வருவது பின்னடைவை ஏற்படுத்திருக்கிறது. ஆடுகளம் தோய்வாக இருப்பதால் இந்திய அணி 150 ரன்கள் மேல் எடுத்தாலே வெற்றி வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.