சஞ்சு சாம்சன் சேப்டர் ஓவர்.. இனியும் ஆதரவளிப்பது பைத்தியக்காரத்தனம்.. கொந்தளித்த முன்னாள் வீரர்!
சென்னை: இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரரான சஞ்சு சாம்சனின் சேப்டர் ஓவர் என்றும், இனியும் அவருக்கு ஆதரவளிப்பது பைத்தியக்காரத்தனம் என்றும் முன்னாள் வீரர் விவி கிரி விமர்சித்துள்ளார்.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடர் இந்திய அணிக்கு பல்வேறு கதவுகளை திறந்துள்ளது. இந்திய அணியை அனுபவ வீரர் ரோகித் சர்மா வழிநடத்த வேண்டும், விராட் கோலி எப்படி மாற்றமடைந்துள்ளார், டி20 உலகக்கோப்பை தொடருக்கான பேட்டிங் லைன் அப், இடதுகை பேட்ஸ்மேன்களின் தேவை ஏன், ஆஃப் ஸ்பின்னர், லெக் ஸ்பின்னர் என்று இந்திய அணிக்கு பல்வேறு முடிவுகள் கிடைத்துள்ளது.

அதேபோல் விக்கெட் கீப்பராக யாரை தேர்வு செய்ய வேண்டும் என்ற முடிவையும் ரோகித் சர்மா எடுத்துள்ளதாகவே தெரிகிறது. ஏனென்றால் முதல் 2 போட்டிகளிலும் ஜித்தேஷ் சர்மாவே களமிறக்கப்பட்டார். அதன்பின் கடைசி போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கும் நோக்கில் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் 5வது வீரராக வந்த சஞ்சு சாம்சன், முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார்.
இது ரசிகர்களிடையே கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. தென்னாப்பிரிக்கா மண்ணில் விளாசிய சதம் காரணமாகவே சஞ்சு சாம்சனுக்கு டி20 அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதிலும் சோபிக்க தவறியுள்ளார். இதுகுறித்து தமிழக கிரிக்கெட் வீரர் விவி கிரி அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், டபுள் சூப்பர் ஓவர் ஆட்டத்தை பார்க்கபே அரிதான விஷயம் தான். அந்த நேரத்திலும் ரோகித் சர்மா ரிட்டையர்ட் அவுட்டாகியது அவரின் அறிவு கூர்மையை காட்டுகிறது.
ரோகித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், சிவம் துபே, விராட் கோலி என்று இந்திய அணி அடுத்த டி20 உலகக்கோப்பைக்கு தயாராகிவிட்டது. சூப்பர் ஓவரில் விராட் கோலியை களமிறக்காதது ஏன் என்று புரியவில்லை. ஆனால் இனி இளம் வீரர் சஞ்சு சாம்சனின் சேப்டர் ஓவர். இனியும் அவருக்கு ஆதரவளிப்பது என்னை பொறுத்தவரை பைத்தியக்காரத்தனம் என்றே சொல்வேன்.
வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ரோகித் சர்மா ஜாம்பவானாக உயர்ந்துவிட்டார். அவரும் விராட் கோலி நிச்சயம் இந்திய டி20 அணியில் இருக்க வேண்டும். இவர்கள் இருவருக்கும் மாற்று வீரர்களே கிடையாது என்றே சொல்வேன். அதனால் பெயருக்காக கூட இனியும் ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சனை டி20 அணிக்குள் கொண்டு வருவது பைத்தியக்காரத்தனம் என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.


Click it and Unblock the Notifications