கடைசி ஒவரில் 30 ரன்கள்.. மேக்ஸ்வெல்லை பொளந்த இந்திய அணி.. ஹாட்ரிக் சாதனை படைத்த இந்தியா
கவுகாத்தி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 222 ரன்கள் குவித்து அபாரமாக விளையாடி இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடும் என்ற முனைப்பில் இந்திய அணி விளையாடுகிறது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆட முற்பட்டு 6 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

இதேபோன்று இஷான் கிசன் டக் அவுட் ஆக இந்திய அணி 24 ரன்களுக்கு இரண்டு விக்கெட் இழந்து தடுமாறியது.இதனால் இன்றைய ஆட்டத்தில் இந்தியா திணற போகிறது என ரசிகர்கள் முடிவு எடுத்தனர். ஆனால் ரசிகர்களின் எண்ணத்தை பொய்யாக்கினார் சிஎஸ்கே சிங்கம் ருதுராஜ். சூரியகுமார் யாதவ் எப்போதும் போலே அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்தார்.
இதில் 5 பவுண்டரிகளும், இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். அப்போது சூரிய குமாருக்கு நல்ல கம்பெனி கொடுத்தார் ருதுராஜ். 32 பந்துகளில் அரை சதம் கடந்தார். ஒரு கட்டத்தில் சூரியகுமார் யாதவும் ஆட்டம் இழக்க ருதுராஜ் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய அணி 16.1 ஓவரில் தான் 150 ரன்கள் கடந்தது. இதனால் 200 ரன்களை தொடுமா என எதிர்பார்த்த போது ருதுராஜ் பேய் ஆட்டம் ஆடினார்.
எப்படி போட்டாலும் நான் அடிப்பேன் என்பது போல் சிக்ஸர் பவுண்டரி என தெறிக்க விட்டார். 18-வது ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட் மூன்று சிக்சர், ஒரு பவுண்டரி என 25 ரன்கள் குவித்தார். இதே போன்று 19வது ஓவரில் 12 ரன்கள் குவித்த ருதுராஜ் மற்றும் திலக் வர்மா ஜோடி 20 வது ஓவரில் மட்டும் 30 ரன்களை விளாசினார்கள்.
இதில் ருதுராஜ் மட்டும் மூணு சிக்ஸர் இரண்டு பவுண்டரிகளை விளாசினார்.
இதன் மூலம் 52 பந்துகளில் சதம் விளாசிய ருதுராஜ் , 20 ஓவர் முடிவில் 57 பந்துகளில் 123 ரன்கள் குவித்தார். இதில் 7 சிக்ஸர்களும் 13 பவுண்டரிகளும் அடங்கும். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் குவித்தது. இதன் மூலம் தொடர்ந்து முன்று முறை இந்திய அணி 200 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
இதனையடுத்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் 35 ரன்கள் சேர்த்து நல்ல தொடக்கத்தை கொடுத்தார். ஒரு கட்டத்தில் இந்தியா வெற்றி நோக்கி சென்ற நிலையில், மேக்ஸ்வெல் அபாரமாக விளையாடி 48 பந்துகளில் 104 ரன்கள் விளாசினார். இதன் மூலம் ஆஸ்திரேலியா திரில் வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications