"Captain Cry Baby" விராட் கோலியை தொடர்ந்து ரோஹித் சர்மாவை அவமானப்படுத்திய ஆஸ்திரேலியா பத்திரிகை!
மெல்போர்ன்: விராட் கோலி Clown Kohli என்று விமர்சித்து ஜோக்கராக அவமானப்படுத்திய தி வெஸ்ட் ஆஸ்திரேலியா பத்திரிகை, இம்முறை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பக்கம் திரும்பியுள்ளது. அவரை "Captain Cry Baby" என்று கூறியதோடு, குழந்தையின் வாயில் வைக்கப்படும் நிப்பிலை ரோஹித் சர்மாவின் வாயில் வைத்து அவமானப்படுத்தியுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் 5வது நாள் ஆட்டம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் கடந்த 100 ஆண்டுகளில் மெல்போர்ன் மைதானத்தில் 270 ரன்களுக்கு மேல் எந்த இலக்கு சேஸ் செய்யப்பட்டதில்லை. தற்போது ஆஸ்திரேலியா அணி 333 ரன்கள் முன்னிலையுடன் களத்தில் உள்ளது.

இதனால் நாளை இந்திய அணியின் ஆட்டம் வெற்றியை நோக்கியதாக இருக்குமா அல்லது டிரா செய்ய போராடுமா என்ற கேள்வி உள்ளது. அதேபோல் இந்த ஆட்டத்தின் முடிவு ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்றாக அமையும் என்று பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் நேற்றிரவே ரோஹித் சர்மாவுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார்.
ஒருவேளை நாளை இந்திய அணி தோல்வியடைந்தால், ரோஹித் சர்மா ஓய்வை அறிவிப்பதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. இதனால் ரோஹித் சர்மா பேட்டிங்கில் மிகப்பெரிய இன்னிங்ஸை ஆட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதுவரை ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா 70 பந்துகளை எதிர்கொண்டு 22 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார்.
இவரை விடவும் ஆஸ்திரேலியா அணியின் கடைசி பேட்ஸ்மேனான போலண்ட் 110 பந்துகளை எதிர்கொண்டிருக்கிறார். இதனால் இந்திய ரசிகர்களிடையே கேப்டன் ரோஹித் சர்மா விமர்சித்து வருகின்றனர். இதனிடையே 4வது நாள் ஆட்டத்தின் போது லபுஷேன் கொடுத்த எளிய கேட்ச் ஒன்றை இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் கோட்டைவிட்டார்.
இதனால் அருகில் ஸ்லிப்பில் நின்ற ரோஹித் சர்மா வெளிப்படையாக கோபத்தை காட்டினார். ஒரு கேப்டன் இப்படி செய்யக் கூடாது என்று இந்திய ஜாம்பவான்களே விமர்சித்தனர். இதனை வைத்து ஆஸ்திரேலியாவில் செயல்பட்டு வரும் தி வெஸ்ட் ஆஸ்திரேலியன் பத்திரிகை ரோஹித் சர்மாவை, "Captain Cry Baby" என்று அவரின் வாயில் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் நிப்பிலையும் வைத்து கண்ணீரில் கதறுவது போல் புகைப்படம் வெளியிட்டுள்ளது.
இந்த பத்திரிகை நேற்று முன் தினம் விராட் கோலியை கோமாளி கோலி என்று அவரின் மூக்கை ஜோக்கர் மூக்கினை போல் மாற்றி அவமானப்படுத்தியது. இதனால் இந்திய அணி ரசிகர்கள் ஆஸ்திரேலியா பத்திரிகைக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். அதேபோல் இந்திய வீரர்களை விமர்சித்து அந்த பத்திரிகை விளம்பரம் தேடி கொள்வதாகவும் இந்திய ஜாம்பவான்கள் கருத்து கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications