சிட்னி : பார்டர் கவாஸ்கர் தொடரை ஆஸ்திரேலிய அணி 10 ஆண்டுகளுக்குப் பிறகு கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. நடப்பு தொடரில் ஆஸ்திரேலிய அணி டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம் மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் தொடரை வென்றது.
இதன் மூலம் 50 ஓவர் உலகக் கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டம், ஆசஸ் தொடர், பாடர் கவாஸ்கர் கோப்பை என அனைத்து கோப்பைகளையும் கம்மின்ஸ் கேப்டனாக வென்று இருக்கிறார்.இந்த நிலையில் வெற்றிக்குப் பிறகு பேசிய கம்மின்ஸ், என்னால் நம்பவே முடியவில்லை.

இந்த ஒரு கோப்பை மட்டும் தான் நாங்கள் வெல்லாமல் இருந்தோம். நாங்கள் இந்த கோப்பையை வெல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன் விளையாடினோம். இந்த தொடர் மீதான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் எங்களுடைய செயல்பாடு இருந்தது. நாங்கள் எங்களுடைய திட்டத்தில் தெளிவாக இருந்தோம்.
இந்தியாவை அதிக ரன்கள் அடிக்க விடக்கூடாது என்று முடிவு எடுத்தோம். ஏனென்றால் இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது கடினம் என்று எங்களுக்கு தெரியும். ஆனால் எங்களுடைய வீரர்கள் இங்கு ரன் சேர்க்க ஒரு வழியை கண்டுபிடித்தார்கள். அது எங்களுக்கு கை கொடுத்தது. எங்களுடைய வீரர்கள் நினைத்து நான் பெருமை கொள்கின்றேன்.
நாங்கள் ஒரே அணியாக இருக்கின்றோம். நேரத்தை ஒன்றாக செலவு இடுகின்றோம். பெர்த் டெஸ்ட் போட்டியில், நாங்கள் தோல்வி அடைந்தாலும் அது ஒன்றும் மோசமான தோல்வியாக தெரியவில்லை. இந்த தொடர் முழுவதும் நாங்கள் மகிழ்ச்சியுடன் செயல்பட்டோம். அதிலும் சிலருக்கு வெற்றி கிடைத்தது எப்போதுமே சந்தோஷமானது தான்.
இது நிச்சயம் ஒரு ஸ்பெஷல் அணி. நாங்கள் சாதித்ததை நினைத்து பெருமை கொள்கின்றோம். இது எங்கள் வாழ்நாளில் சிறந்த நாட்களில் ஒன்றாகும். இந்த தொடரில் மூன்று இளம் வீரர்கள் அறிமுகமானார்கள். மூன்று பேருமே சிறப்பாக செயல்பட்டார்கள். அறிமுக வீரரான வெப்ஸ்டரும் விளையாடிய ஆட்டம் எங்களுக்கு திருப்தியை கொடுத்தது.
அனுபவ வீரர்களான ஹெட்,ஸ்மித் ஆகியோர் முக்கியமான கட்டத்தில் தங்களுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை காப்பாற்றி இருக்கிறார்கள். இது போல் பல முக்கிய கட்டத்தில் பலரும் அபாரமாக விளையாடி இருக்கிறார்கள். நான் விளையாடியதிலே இது என் மனதிற்கு பிடித்த சிறந்த தொடராக அமைந்துள்ளது. இதற்கு ரசிகர்களும் ஒரு காரணம். தொடர் முழுவதும் ரசிகர்கள் அதிக அளவு மைதானத்திற்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கம்மின்ஸ் கூறியுள்ளார்.