அகமதாபாத்: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் 7 முறை விளையாடியுள்ள நிலையில், 2 முறை தோல்வியடைந்துள்ளது இந்திய ரசிகர்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன. அகமதாபாத் மைதானத்தில் போட்டி நடக்கவுள்ளதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 2003ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், 20 ஆண்டுகளுக்கு பின் இந்தியா பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதுவரை ஆஸ்திரேலியா அணி 7 முறை உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடியுள்ளது. அதில் 1987, 1999, 2003, 2007 மற்றும் 2015 என்று 5 முறை உலகக்கோப்பையை வென்று அசத்தியுள்ளது. ஐசிசி தொடர்கள் என்றாலே ஆஸ்திரேலியா அணி விஸ்வரூபம் எடுக்கும் என்பதால், இந்திய ரசிகர்கள் மத்தியில் சிறிய பீதியும் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் இந்திய அணி கடந்த 9 ஐசிசி தொடர்களில் தோல்வியை சந்தித்துள்ளது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணி 2 முறை உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தது தெரிய வந்துள்ளது. உலகக்கோப்பை தொடர் தொடங்கிய ஆண்டான 1975ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி தோல்வியடைந்தது. இயான் சேப்பல் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் கிளைவ் லாய்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோல்வியடைந்தது. அந்த போட்டியில் கிளைவ் லாய்ட் 85 பந்துகளில் 102 ரன்களை விளாசி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
அதேபோல் 1996ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து இலங்கை அணி விளையாடியது. இந்த போட்டியில் ஸ்டீவ் வாஹ், மார்க் வாஹ், மார்க் டெய்லர், வார்னே, பெவன், ரிக்கி பாண்டிங் என்ற வலிமையான அணி அர்ஜுனா ரணதுங்கா மற்றும் அரவிந்த டி சில்வா ஆகியோரின் ஆக்ரோஷத்தில் வீழ்ந்தது. இந்த போட்டியில் ஆக்ரோஷமாக ஆடிய அரவிந்த டி சில்வா 124 பந்துகளில் 107 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்து வெற்றியை பெற வைத்தார்.
இதனால் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா ஒன்றும் வீழ்த்த முடியாத அணி இல்லை என்று தெரிய வந்துள்ளது. இதனால் அகமதாபாத் மைதானத்தில் இந்திய அணி நிச்சயம் வென்று 3வது முறையாக உலகக்கோப்பை வென்று சாதனை படைக்கும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.