துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் ஆஸ்திரேலியா அணி தரப்பில் டிராவிஸ் ஹெட் - கானலி கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் கானலி டக் அவுட்டாகி ஏமாற்றினார்.
இதன்பின் டிராவிஸ் ஹெட் - ஸ்டீவ் ஸ்மித் கூட்டணி இணைந்தது. இதன்பின் ஸ்டீவ் ஸ்மித் நிதானமாக விளையாட, மறுமுனையில் டிராவிஸ் ஹெட் அதிரடி ஆட்டத்தை தொடங்கினார். அதில் ஹர்திக் பாண்டியா பவுலிங்கில் சிக்ஸ், பவுண்டரி அடிக்க, ஷமி பவுலிங்கில் ஹாட்ரிக் பவுண்டரியை விளாசி தள்ளினார். 2வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், டிராவிஸ் ஹெட் 39 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித் - லபுஷேன் கூட்டணி இணைந்து நிதானமாக ரன்களை சேர்த்தது. இதன்பின் இந்திய அணி தரப்பில் ஸ்பின்னர்கள் அட்டாக்கில் வந்தனர். இருவரும் சேர்ந்து ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோரை 100 ரன்களுக்கு மேல் உயர்த்தினர். சிறப்பாக ஆடிய லபுஷேன் கடைசி வரை களத்தில் இருப்பார் என்று பார்க்கப்பட்ட போது, ஜடேஜாவின் சுழலில் சிக்கி 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து வந்த இங்லிஸ் 11 ரன்களில் வெளியேற, ஆஸ்திரேலியா அணி 144 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது இணைந்த அலெக்ஸ் கேரி - ஸ்டீவ் ஸ்மித் கூட்டணி விரைவாக ரன்களை குவிக்க தொடங்கியது. சிறப்பாக ஆடிய ஸ்டீவ் ஸ்மித் 68 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். இதன்பின் ரன் குவிப்பை ஸ்டீவ் ஸ்மித் விரைவுபடுத்தினார்.
இதனிடையே திடீரென ரோஹித் சர்மா முகமது ஷமியை அட்டாக்கில் கொண்டு வந்தார். அவர் தொடர்ந்து பவுன்சர் மற்றும் ஷார்ட் பால்களை வீசி வந்த நிலையில், திடீரென ஃபுல் டாஸ் பந்து மூலமாக ஸ்டீவ் ஸ்மித்தை 73 ரன்களுக்கு வெளியேற்றினார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல் 7 ரன்களில் வெளியேற, மொத்த பொறுப்பும் அலெக்ஸ் கேரி மீது விழுந்தது.
ஆனால் பொறுப்பேற்று கொண்ட அலெக்ஸ் கேரி சரியான பந்துகளை அட்டாக் செய்து ஸ்கோரை விரைவாக உயர்த்தினார். சிறப்பாக ஆடிய அவர் 48 பந்துகளில் அரைசதம் கடக்க, மறுமுனையில் நின்ற டுவார்ஷிய்ஸ் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின் ஆடம் சாம்பாவுக்கு ஸ்ட்ரைக் கொடுக்க கூடாது என்று ஆடிய அலெக்ஸ் கேரி, 57 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஸ்ரேயாஸ் ஐயரின் அபார ஃபீல்டிங்கால் ரன் அவுட்டாகினார்.
பின்னர் வந்த நேதன் எல்லீஸ் அதிரடியாக 10 ரன்களை சேர்த்து ஆட்டமிழக்க, ஆஸ்திரேலியா அணி 262 ரன்களை சேர்த்திருந்தது. கடைசி ஓவரில் சாம்பாவும் 7 ரன்களில் வெளியேற, ஆஸ்திரேலியா அணி 49.2 ஓவர்களில் 264 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. சிறப்பாக பவுலிங் செய்த இந்திய அணியின் முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.