சென்னை: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் படைத்துள்ளார்.
உலகக்கோப்பை தொடரின் 5வது லீக் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் 199 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 200 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணி தரப்பில் ரோகித் சர்மா - இஷான் கிஷன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் நட்சத்திர இடதுகை வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் முதல் ஓவரை வீச அழைக்கப்பட்டார். இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ரோக்கித் சர்மா திணறுவார் என்பதால், போட்டி இன்னும் விறுவிறுப்பானது.
ஆனால் லெக் பைஸ் ஓடி ரோகித் சர்மா எதிர்முனைக்கு சென்றார். இதனால் இந்திய அணியின் இளம் வீரர் இஷான் கிஷன் ஸ்ட்ரைக்கில் இருந்தார். அவர் மிட்செல் ஸ்டார்க்கை எதிர்கொண்ட முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் மிட்செல் ஸ்டார்க் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை தொடரில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் ஸ்டார்க் படைத்துள்ளார். வெறும் 19 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள மிட்செல் ஸ்டார்க் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவருக்கு முன் இலங்கை அணியின் ஜாம்பவான் வீரரான லசித் மலிங்கா 25 உலகக்கோப்பை இன்னிங்ஸ்களில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.
அதேபோல் உலகக்கோப்பை தொடரில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய 5வது வீரர் என்ற பெருமையையும் ஸ்டார்க் பெற்றுள்ளார். இவருக்கு முன்பாக வாசிம் அக்ரம், கிளென் மெக்ராத், முத்தையா முரளிதரன், லசித் மலிங்கா ஆகியோர் உலகக்கோப்பை தொடர்களில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். அவர்களுக்கு பின் 50 விக்கெட்டுகளை மிட்செல் ஸ்டார்க் மட்டுமே வீழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.