பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பவுலிங் மாற்றம், ஃபீல்டிங் திட்டங்கள் மற்றும் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் கம்மின்ஸ்-ன் ஃபீல்டிங் திட்டங்களை ஒப்பிட்டு, இந்திய அணி செய்த தவறுகளை பார்க்கலாம்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி காபா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா அணி 445 ரன்களை விளாசியுள்ளது. அதிகபட்சமாக ட்ராவிஸ் ஹெட் 152 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்களையும் குவித்தனர். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரிட் பும்ரா 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 3வது நாள் ஆட்டத்தில் 51 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. கேஎல் ராகுல் 33 ரன்களுடனும், ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். இந்தப் போட்டியில் 3 நாட்களில் 2 நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், இந்திய அணி தோல்வியடையவே அதிக வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.
இதற்கு முதன்மை காரணமாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அமைந்துள்ளார். ஏனென்றால் ரோஹித் சர்மா கேப்டன்சியில் அனுபவமின்மை வெளிப்படையாகவே தெரிந்தது. ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் கம்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க் பவுலிங் செய்த போது 3 ஸ்லிப் மற்றும் ஒருவரை கல்லி திசையில் ஃபீல்டிங் நிறுத்தி இருந்தார்.
அதேபோல் ஜெய்ஸ்வாலின் பயிற்சியை கண்டு, ஃபிளிக் ஷாட்டிற்கு ஏற்ப மிட் விக்கெட்டிலும் ஒரு ஃபீல்டரை நிறுத்தினார். இதன் மூலமாக ஆஸ்திரேலியா அணி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில்லின் விக்கெட்டை எளிதாக வீழ்த்த முடிந்தது. ஆனால் ரோஹித் சர்மாவோ பும்ரா பவுலிங் செய்த போது 2 ஸ்லிப் மற்றும் கல்லியில் ஒருவரை மட்டுமே நிறுத்தி இருந்தார்.
ட்ராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் பேட்டிங்கை தொடங்கிய போது 3வது ஸ்லிப் திசையில் அதிகளவில் கேட்ச்களை கொடுத்தனர். அதேபோல் ட்ராவிஸ் ஹெட் அட்டாக் செய்துவிட்டாலே, உடனடியாக 5 ஃபீல்டர்களை பவுண்டரியை தடுக்க நிறுத்தி அதிர்ச்சி கொடுத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் பவுண்டரிகளை கட்டுப்படுத்துவதோடு, அட்டாக்கிங் ஃபீல்ட் செட்டை அமைப்பது மிகவும் முக்கியம்.
ட்ராவிஸ் ஹெட் பாய்ண்ட் திசையில் எளிதாக ஒரு ரன்னை தொடர்ச்சியாக எடுத்த போது, அங்கே கடைசி வரை ஃபீல்டரை நிறுத்தவில்லை. தேர்டு மேன் ஃபீல்டிங் குறித்து ஹெய்டனே விளாசிவிட்டார். அதேபோல் ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் இந்திய அணியின் ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கு ஒரு திட்டத்துடன் களமிறங்குவது தெளிவாக தெரிந்தது.
விராட் கோலியின் விக்கெட்டை ஹேசல்வுட் வீழ்த்திய போதும், ரிஷப் பண்ட் களமிறங்கிய பின் கம்மின்ஸ் உடனடியாக அட்டாக்கில் வந்தார். ஏனென்றால் இந்த டெஸ்ட் தொடரில் ஏற்கனவே ரிஷப் பண்ட் விக்கெட்டை அவர் வீழ்த்தி இருந்தார். அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா அணியின் 3 பவுலர்களும் ஃபுல் லெந்தில் பவுலிங் செய்து ட்ரைவ் அடிக்க தூண்டி கொண்டே இருந்தனர்.
ஆனால் இந்திய அணி பவுலர்களோ ஃபுல் லெந்தில் பவுலிங் செய்வேனா என்று சோதித்தனர். கடைசி நேரத்தில் பவுலிங் செய்த நேதன் லயனுக்கு கூட லெக் ஸ்லிப்பில் ஃபீல்டரை நிறுத்தி கம்மின்ஸ் அட்டாக் செய்தார். ஆனால் ரோஹித் சர்மா பாடி லைன் அட்டாக்கை பற்றி கொஞ்சம் கூட சிந்திக்கவே இல்லை. கடந்த முறை இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றதற்கே பாடி லைன் அட்டாக் தான் முக்கியமான காரணம்.
இந்திய அணியின் திட்டத்தை இந்திய அணிக்கு எதிராக கம்மின்ஸ் வெளிப்படையாக பயன்படுத்தியது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்திருக்கும். ஆனால் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பவுலர்களின் கைகளில் ஓய்வறை திட்டத்தை மட்டும் கூறிவிட்டு ஸ்லிப் நின்று ஃபீல்டிங் செய்து வருகிறார். இதனால் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி சராசரிக்கும் குறைவாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.