துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அரையிறுதி சுற்றில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை இன்று எதிர்கொள்கிறது. துபாயில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் அரையிறுதி போட்டிக்கு புதிய ஆடுகளம் பயன்படுத்தப்படுகிறது.
இந்த சூழலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்மித் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இது குறித்து பேசிய அவர், "ஆடுகளம் மிகவும் காய்ந்த நிலையில் இருப்பதால் முதலில் பேட்டிங் செய்து அதிக அளவு ரன்கள் குவிக்க நாங்கள் முயற்சி செய்வோம்."

"இந்த மைதானத்தில் இரண்டு பயிற்சி முகாம்களை நாங்கள் நடத்தி இருக்கிறோம். சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் இருக்கும் என நினைக்கின்றேன். இந்திய அணி எப்போதுமே ஒரு நல்ல வீரர்களை கொண்ட அணியாக இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் நாங்கள் இரண்டு மாற்றங்களை செய்து இருக்கின்றோம். ஸ்பென்சர் ஜான்சனுக்கு பதிலாக சங்காவும், ஷாட்டுக்கு பதிலாக கூப்பரும் அணியில் தேர்வாகி இருக்கிறார்கள்" என்று கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, "புதிய ஆடுகளம் என்பதால் இன்று எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இதனால் முதலில் பேட்டிங் செய்வதற்கும், பந்து வீசுவதற்கும் நான் தயாராகவே இருந்தேன். இதுபோல் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் நேரத்தில் டாஸ் இழப்பது நல்ல விஷயம். துபாய் ஆடுகளத்தில் வழங்கப்படும் ஒவ்வொரு பிட்ச்சும் ஒவ்வொரு மாதிரி செயல்படுகிறது."
"எனவே நாம் நல்ல கிரிக்கெட் விளையாடினால் மட்டுமே வெற்றி பெற முடியும். நாங்கள் லீக் சுற்றில் மூன்று போட்டிகளிலுமே நல்லவிதமாக விளையாடினோம். அதையே இன்றும் நாங்கள் செயல்படுத்த விரும்புகிறோம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி எப்போதுமே கடும் சவால்களை கொடுக்கும்."
"நாங்கள் நியூசிலாந்துக்கு எதிரான எந்த வீரர்களை வைத்து விளையாடினோமோ, அதே வீரர்களை தான் இன்றைய ஆட்டத்திலும் வைத்திருக்கிறோம். கடந்த போட்டியில் விட்ட இடத்தில் இருந்து மீண்டும் இந்த போட்டியில் தொடர விரும்புகின்றோம். முதலில் தற்போது பந்து வீசுவதால் ஆஸ்திரேலிய அணியை முடிந்தவரை குறைந்த இலக்கில் சுருட்ட முயற்சி செய்வோம்" என்று போகித் சர்மா கூறியுள்ளார். நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய வருண் சக்கரவர்த்திக்கு மீண்டும் ரோகித் சர்மா வாய்ப்பு வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.