சிட்னி: ஆஸ்திரேலியா அணியின் சாம் கான்ஸ்டஸ் பேசுவதை விடவும் அவரின் பேட் பேசினால் நன்றாக இருக்கும் என்று முன்னாள் வீரர் மார்க் வாஹ் அட்வைஸ் கொடுத்துள்ளார். பும்ராவுடன் மோதலில் ஈடுபட்டதால் கவாஜாவின் கவனம் திசை திரும்பியதாக கூறியுள்ள அவர், கான்ஸ்டஸ் அவரின் வேலையை மட்டும் பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் போது, இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரிட் பும்ராவை ஆஸ்திரேலியா அணியின் இளம் வீரர் சாம் கான்ஸ்டஸ் தேவையில்லாமல் சண்டைக்கு இழுத்தார். நேரத்தை வீணாக்குவதற்காக ஆஸ்திரேலியா அணியின் கவாஜா - கான்ஸ்டஸ் இருவரும் சில விஷயங்களை செய்து கொண்டே இருந்தனர்.

ஒரு கட்டத்தில் பும்ரா பவுலிங் செய்ய தயாராகிய போதும் கூட, கவாஜா பேட்டிங் செய்வதற்கு தயாராகவில்லை. இதனால் விரக்தியடைந்த பும்ரா, உடனடியாக கைகளை உயர்த்தி எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது மறுமுனையில் நின்றிருந்த இளம் வீரர் சாம் கான்ஸ்டஸ், உடனடியாக பும்ராவிடம் சில வார்த்தைகளை விட்டார். இதனால் டென்ஷனான பும்ராவும் நேரடியாக மோதலில் ஈடுபட்டார்.
பின்னர் சூழலை புரிந்து கொண்ட நடுவர், இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். அதன்பின் அந்த ஓவரின் கடைசி பந்தில் கவாஜா விக்கெட்டை வீழ்த்தி பும்ரா பதிலடி கொடுத்து சம்பவம் செய்தார். இதன்பின் இந்திய அணியின் மொத்த வீரர்களும் கான்ஸ்டஸை ஸ்லெட்ஜிங் செய்து ஓய்வறைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் இந்திய வீரர்களும் எழுச்சியை கண்டனர்.
இதுகுறித்து ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் மார்க் வாஹ் பேசுகையில், உஸ்மான் கவாஜா இன்னொரு முறை பும்ராவின் ஓவரை சந்திக்க கூடாது என்பதற்காக நேரத்தை கடத்த முயற்சித்ததை புரிந்து கொள்ள முடிகிறது. அந்த நேரத்தில் திடீரென சாம் கான்ஸ்டஸ் பும்ராவுடன் மோதலில் ஈடுபடுகிறார். அது இளம் வீரர் என்பதால் உற்சாகத்தில் அப்படி செய்தாரா அல்லது ஜூனியர் லெவல் கிரிக்கெட்டை அப்படி விளையாடி எனர்ஜியை அதிகரித்து கொள்பவரா என்பது தெரியவில்லை.
ஆனால் அந்த இடத்தில் சாம் கான்ஸ்டஸ் மோதலில் ஈடுபட்டது தேவையில்லாத ஒன்றாகும். அந்த நேரத்தில் கான்ஸ்டஸ் வாயை கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். அவரின் செயல் கவாஜாவின் கவனத்தை திசை திருப்பிவிட்டது. அதேபோல் கான்ஸ்டஸ் தொடர்ச்சியாக இப்படியான செயல்களில் ஈடுபட்டால், அவர் எதிரணிகளால் குறி வைக்கப்படுவதற்கான சூழலை அவரே ஏற்படுத்தி கொடுப்பார்.
எதிரணிக்கு தேவையான உற்சாகத்தையும், எனர்ஜியையும் கான்ஸ்டஸ் ஏற்படுத்தி கொடுத்துள்ளார். ஜஸ்பிரிட் பும்ராவை சீண்டியதால், அவர் கூடுதல் ஆக்ரோஷத்துடன் இருந்தார். பும்ரா போன்ற ஒருவரை சீண்டி தேவையில்லாமல் சிக்கலில் சிக்கக் கூடாது. சாம் கான்ஸ்டஸ் அவரின் வேலையை மட்டும் செய்தால் போதும். அவர் பேசுவதை விடவும் அவரின் பேட் அதிகம் பேச வேண்டும் என்று அட்வைஸ் செய்துள்ளார்.