பெர்த்: இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி என்ற பேட்ஸ்மேன் குறித்து எந்த கவலையும் கொள்ள தேவையில்லை என்று கேப்டன் ஜஸ்பிரிட் பும்ரா தெரிவித்துள்ளார். ஒரு சில டெஸ்ட் தொடர்களில் விராட் கோலி சில இறக்கங்களை சந்தித்திருந்தாலும், இந்த டெஸ்ட் தொடரில் அசத்துவார் என்று பும்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்றுள்ளது. நாளை பெர்த் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் நடக்கவுள்ள நிலையில், இந்திய அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் பேட்டிங் முழுக்க முழுக்க விராட் கோலியின் ஆட்டத்தை சுற்றியே அமைந்துள்ளது.

அதற்கேற்ப ஆஸ்திரேலியா மண்ணில் இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 6 சதங்கள், 4 அரைசதங்கள் உட்பட 1,352 ரன்களை விளாசி இருக்கிறார். இதனால் மீண்டும் ஆஸ்திரேலியா மண்ணில் விராட் கோலி தனது ஆதிக்கத்தை தீவிரப்படுத்துவாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே உள்ளது. ஏனென்றால் நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் விராட் கோலி 6 இன்னிங்ஸில் வெறும் 93 ரன்களை மட்டுமே சேர்த்தார்.
ஸ்பின்னர்களுக்கு எதிராக விராட் கோலி கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக திண்டாடி வந்தாலும், வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அவரின் ஆட்டம் உச்சத்தில் தான் இருக்கிறது. இதனால் இம்முறை ஆஸ்திரேலியா மண்ணில் விராட் கோலி மீண்டும் பீஸ்ட் ஃபார்முக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விராட் கோலி ஃபார்ம் குறித்து இந்திய அணியின் கேப்டன் பும்ராவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதுகுறித்து பும்ரா பேசுகையில், இந்திய அணியின் கேப்டன்களில் விராட் கோலியும் ஒருவர். விராட் கோலியின் தலைமைக்கு கீழ் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் நானும் அறிமுகமானேன். விராட் கோலி என்ற பேட்ஸ்மேன் குறித்து நான் கருத்தும் சொல்ல தேவையில்லை என்று நினைக்கிறேன். ஏனென்றால் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரர்களில் விராட் கோலியும் ஒருவர். இந்திய அணியின் முழுமையான பேட்ஸ்மேன் என்றும் சொல்வேன்.
ஒன்று அல்லது இரண்டு டெஸ்ட் தொடர்களில் விராட் கோலியின் பேட்டிங் ஏற்ற இறக்கங்களை சந்தித்திருக்கலாம். ஆனால் விராட் கோலியின் மன உறுதி உச்சத்தில் இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே நான் ஜிங்ஸ் செய்ய வேண்டாம் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலமாக இந்திய அணி நிர்வாகத்தின் முழு ஆதரவும் விராட் கோலிக்கு இருப்பதாக பார்க்கப்படுகிறது.