IND vs AUS- 157 ரன்களில் சுருண்ட இந்திய அணி.. ஆஸ்திரேலியாவுக்கு 162 ரன்கள் வெற்றி இலக்கு
5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும்.

ஆனால் கையில் கிடைத்த வாய்ப்பை இந்திய அணி கீழே போட்டு விட்டது. இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்திய வீரர்கள் தடுமாறினர். ஜெய்ஸ்வால் 22 ரன்களிலும், கே எல் ராகுல் 13 ரன்களிலும், கில் 13 ரன்களிலும் ஆட்டமிழ்ந்தனர்.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 6 ரன்களில் வெளியேறினார்.
இதனால் இந்திய அணி 78 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த சூழலில் ரிஷப் பண்ட் மட்டும் அதிரடியாக விளையாடி 33 பந்துகளில் 62 ரன்கள் குதித்தார். இதில் நான்கு சிக்ஸர், 6 பவுண்டரிகள் அடங்கும். இதனை அடுத்து மூன்றாவது நாள் தொடக்கத்தில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் என்ற ஸ்கோருடன் தொடங்கியது. ஜடேஜா 8 ரன்களிலும்,வாஷிங்டன் சுந்தர் 6 ரன்களிலும் மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர்.
ஜடேஜா,வாஷிங்டன் சுந்தர் கூட்டணி பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது. ஜடேஜா 13 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் 12 ரன்களிலும் ஆட்டம் இழக்க, சிராஜ் நான்கு ரன்களில் வெளியேற பும்ரா டக் அவுட்டானார்.
இதனால் இந்திய அணி 39.5 ஓவரில் 157 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணியின் ஸ்காட் போலந்து அதிகபட்சமாக ஆறு விக்கெட்டுகளையும் பேட் கம்மின்ஸ் மூன்று விக்கட்டுகளையும் வீழ்த்தினார். 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் ஆஸ்திரேலியா தற்போது விளையாடி வருகிறது.


Click it and Unblock the Notifications