மெல்போர்ன்: கிரிக்கெட் உலகில் இதுவரை எந்த பந்துவீச்சாளரும் செய்யாத இமாலய சாதனையை செய்திருக்கிறார் பும்ரா. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்கள் வீழ்த்திய அவர் இரண்டாவது இன்னின்ங்ஸிலும் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியின் முதல் 6 விக்கெட்களில் பும்ரா மட்டுமே 4 விக்கெட்களை சாய்த்தார். இதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 200 விக்கெட்கள் என்ற மைல்கல்லை கடந்தார். இதில் மிகப்பெரும் சாதனை என்னவெனில் மிகக் குறைந்த பவுலிங் சராசரியுடன் இந்த சாதனையை செய்துள்ளார்.

பும்ராவின் பவுலிங் சராசரி தற்போது 19.38 ஆக உள்ளது. 200 விக்கெட்களை வீழ்த்திய பின் குறைந்த பவுலின் சராசரி வைத்திருந்த பந்துவீச்சாளர்களில் பும்ரா முதல் இடத்தில் இருக்கிறார். அது மட்டுமன்றி, ஒட்டுமொத்தமாக 200 விக்கெட்கள் அல்லது அதற்கும் மேல் வீழ்த்திய பந்து வீச்சாளர்களை கணக்கில் எடுத்துக் கொண்டாலும் அதிலும் பும்ராவே மிகக் குறைந்த பவுலிங் சராசரி வைத்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் -இன் மால்கம் மார்ஷல் 376 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். அவரது பவுலிங் சராசரி 20.94 ஆக உள்ளது. அதுவே இதுவரை 200 விக்கெட்கள் அல்லது அதற்கும் மேல் வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் மிகச்சிறந்த பவுலிங் சராசரியாக இருந்தது. அந்த சாதனையையும் முறியடித்து இருக்கிறார் பும்ரா.
மேலும், மிகக் குறைந்த பந்துகளில் 200 விக்கெட்களை வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையையும் பும்ரா செய்து இருக்கிறார். இதற்கு முன், முகமது ஷமி 9896 பந்துகளில் 200 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அந்த சாதனையை முந்தி இருக்கும் பும்ரா தற்போது 8,484 பந்துகளில் 200 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். அஸ்வின் 10,248 பந்துகளில் 200 விக்கெட்களை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
குறைந்த பந்துகளில் 200 டெஸ்ட் விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் -
ஜஸ்பிரித் பும்ரா - 8484
முகமது ஷமி - 9896
அஸ்வின் - 10248
கபில் தேவ் - 11066
ரவீந்திர ஜடேஜா - 11989
மேலும், சர்வதேச அளவில் மிக குறைந்த பந்துகளில் 200 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்திய பந்து வீச்சாளர்களில் நான்காவது இடத்தில் இருக்கிறார் பும்ரா.
சர்வதேச அளவில் குறைந்த பந்துகளில் 200 டெஸ்ட் விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் -
வக்கார் யூனிஸ் - 7725
டேல் ஸ்டெய்ன் - 7848
ககிசோ ரபாடா - 8154
ஜஸ்பிரித் பும்ரா - 8484*
மால்கம் மார்ஷல் - 9234