பெர்த் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 150 ரன்கள் ஆட்டம் இழக்க ஆஸ்திரேலிய அணி 104 ரன்கள் எடுத்து, 46 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் அபாரமாக விளையாடி 487 ரன்கள் குவித்தது.
534 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 238 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில், இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த போட்டியில் கேப்டனாக களமிறங்கும் முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளும், இரண்டாவது இன்னிங்சில் மூன்று விக்கெட்டுகளும் கைப்பற்றி ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் தற்காலிக கேப்டன் பும்ரா, இந்த டெஸ்ட் போட்டி முழுவதும் நான் மகிழ்ச்சியாக இருந்தேன்.
முதல் இன்னிங்சில் நாங்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டும், அந்த சூழலில் இருந்து நாங்கள் மீண்ட விதம் பெருமையாக இருக்கின்றது. 150 ரன்கள் அவுட் ஆகியும் நான் நம்பிக்கையை இழக்கவில்லை. நாம் சரியாகப் பந்து வீசினால், நிச்சயம் ஆஸ்திரேலியாவையும் ஆட்டம் இழக்க வைக்க முடியும் என்று எனக்கு நன்றாகவே தெரியும். நான் இதே மைதானத்தில் 2018 ஆம் ஆண்டு விளையாடி இருக்கின்றேன்.
அப்போது ஆடுகளம் போக போக வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. அந்த அனுபவம் எனக்கு இந்த டெஸ்ட் போட்டியில் நல்ல கை கொடுத்தது. ஆனால் இந்த டெஸ்ட் போட்டிக்கு பயன்படுத்தப்பட்ட ஆடுகளத்தை விட அந்த ஆடுகளம் தான் வெற்றிக்கு சாதகமாக இருந்தது. ஆஸ்திரேலியாலில் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் இருக்கும்போது நாம் விக்கெட் எடுக்க வேண்டும் என்று தீவிரமாக செயல்படக் கூடாது.
அப்படி செயல்படும்போது லைன் மற்றும் லெங்த் மாறுபடும். இதன் மூலம் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க ஏதுவான வாய்ப்பை நாமே ஏற்படுத்தி தந்து விடுவோம். ஆஸ்திரேலியாவில் நாம் எப்போதுமே சரியான லைன் மற்றும் லென்த்தில் எந்த நெருக்கடியில் இல்லாமல் செயல்பட்டால் நிச்சயம் விக்கெட்டுகள் கிடைக்கும். அதை தான் நான் வீரர்களிடம் கூறினேன்.
நீங்கள் விக்கெட் வேண்டும் என்றெல்லாம் போராட வேண்டாம். சரியாக உங்கள் பணியை செய்தால் விக்கெட் தானாகவே கிடைக்கும் என்று கூறினேன். ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் விளையாட வேண்டும் என்றால் அனுபவம் மிகவும் முக்கியமாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல் உங்கள் திறமையை நீங்கள் நம்பினால் நிச்சயம் உங்களால் சாதிக்க முடியும். ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த தொடக்கத்தை கொடுத்திருக்கிறார். அவர் விளையாடியதிலேயே இதுதான் ஒரு சிறந்த இன்னிங்ஸ் ஆக இருக்கும்.
அடிக்க முடியாத பந்தை எல்லாம் சரியாக விட்டு நல்ல பந்துகளை அடித்து ரன்களும் குவித்தார். கோலி பார்ம் அவுட் ஆகிவிட்டார் என்று சொல்வது தவறு. அவர் சவாலான ஆடுகளங்களில் தொடர்ந்து விளையாடி வந்தார். பயிற்சி முகாமிலும் கோலி சிறப்பாகவே செயல்பட்டார். தற்போது ரசிகர்களின் ஆதரவும் மைதானத்தில் அவருக்கு இருந்தது. இதனை அவர் நிச்சயம் மகிழ்ச்சியாக அனுபவிப்பார். இனி அடுத்த டெஸ்ட் போட்டிக்கு நாங்கள் தயாராக வேண்டும். பத்து நாள் ஓய்வு கிடைத்திருக்கிறது இதை நாங்கள் சரியாக பயன்படுத்துவோம் என்று பும்ரா கூறியுள்ளார்.