சிட்னி: பும்ராவுக்கு அதிக பணிச் சுமை அளிக்கப்பட்டதால் அவருக்கு காயம் ஏற்பட்டதாக வெளியான செய்திகளை சுட்டிக்காட்டி முன்னாள் இந்திய வீரர் பல்வீந்தர் சிங் சாந்து சரமாரியான விமர்சனத்தை முன் வைத்து இருக்கிறார். ஒரு இன்னிங்ஸ்-க்கு 20 ஓவர்கள் கூட வீச முடியவில்லை என்றால் பும்ரா இந்தியாவுக்காக கிரிக்கெட் ஆடுவதை மறந்து விட வேண்டும் என கூறி இருக்கிறார்.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1 - 3 என தோல்வி அடைந்து இருந்தது. இந்திய அணியில் பும்ரா மட்டுமே சிறப்பாக விளையாடி 32 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். ஆனால், ஐந்தாவது போட்டியின் போது அவருக்கு முதுகில் வலி ஏற்பட்டது. அவர் நான்காவது டெஸ்ட் போட்டியில் அதிக ஓவர்கள் வீசியதால்தான் அவருக்கு ஐந்தாவது போட்டியின் போது முதுகில் பிரச்சனை ஏற்பட்டது என கூறப்படுகிறது.

இது பற்றி பேசி இருக்கும் 1983 உலகக் கோப்பை வெற்றியாளர் பல்வீந்தர் சிங் சாந்து பணிச் சுமை என்பதை பற்றி பேசுவது தவறானது என சுட்டிக்காட்டி இருக்கிறார். இது பற்றி அவர் பேசுகையில், "பணி சுமையா? பும்ரா எத்தனை ஓவர் வீசினார்? மொத்தமாக 150 ஓவர்கள் வீசி இருப்பாரா? ஆனால் எத்தனை போட்டிகளில், எத்தனை இன்னிங்ஸ்களில் அதை வீசினார்? 5 போட்டிகளில், ஒன்பது இன்னிங்ஸ்களில் அதை வீசி இருக்கிறார் இல்லையா?"
"அப்படி என்றால் ஒரு இன்னிங்ஸிற்கு 16 ஓவர்கள் வருகிறது. ஒரு போட்டிக்கு 30 ஓவர்கள் வீசி இருக்கிறார். அவர் அந்த 15 ஓவர்களையும் ஒரேயடியாக வீசவில்லை. அவர் பகுதி, பகுதியாக (Spells) பிரித்துதான் அதை வீசி இருக்கிறார். இது பெரிய விஷயம் இல்லை. பணிச் சுமை நிர்வாகம் என்பது வெற்றுப் பேச்சு. அது ஆஸ்திரேலியாவின் சொற்பதம். அதை உருவாக்கியது ஆஸ்திரேலியர்கள் தான். பணிச்சுமை நிர்வாகம் என்பது ஒன்றுமே இல்லை. அதை நான் ஏற்றுக் கொள்ளவே மாட்டேன்."
"நாங்கள் ஆடிய காலத்தில் கிரிக்கெட் வீரர்கள், தங்களின் உடல் என்ன சொல்கிறதோ அதை மட்டுமே கேட்பார்கள். மற்றவர்கள் சொல்வதை எல்லாம் கேட்க மாட்டார்கள். எனவே, பணிச் சுமை காரணமாக காயம் என சொல்வதை நான் ஏற்க மாட்டேன். ஒரு நாளில் 15 ஓவர்களை பகுதி, பகுதியாக பிரித்து வீசுவது என்பது ஒரு பந்து வீச்சாளருக்கு பெரிய விஷயமே இல்லை."
"நீங்கள் ஒரு டெஸ்ட் போட்டியின் ஐந்து நாட்களிலும் பந்து வீசுவதில்லை. மூன்று அல்லது நான்கு பகுதிகளாக பிரித்துதான் அந்த 15 ஓவர்களை வீசுகிறீர்கள். இன்று மிகச்சிறந்த பிசியோதெரபிஸ்ட், மிகச் சிறந்த மருத்துவர்கள் உள்ளனர். அப்படி இருந்தும் ஒரு பந்துவீச்சாளர் ஒரு இன்னிங்ஸ்-க்கு 20 ஓவர் வீச முடியவில்லை என்றால் அவர் இந்தியாவுக்காக விளையாடுவதை மறந்து விட வேண்டும்."
"நீங்கள் இந்தியாவுக்காக ஆட வேண்டும் என்றால் 20 ஓவர்களை ஒரு இன்னிங்ஸில் வீசுவதற்கான பலம் உங்களுக்கு இருக்க வேண்டும். அதை உங்களால் செய்ய முடியவில்லை என்றால் டி20 போட்டிகளில் மட்டும் விளையாடுங்கள். அங்கே நீங்கள் நான்கு ஓவர்கள் மட்டும் தான் வீச வேண்டும். அந்த நான்கு ஓவரையும் கூட நீங்கள் மூன்று பகுதிகளாக பிரித்து வீசுங்கள்."
"நாங்கள் ஒரே நாளில் 25 முதல் 30 ஓவர்கள் வரை வீசுவோம். கபில் தேவ் அவரது கிரிக்கெட் வாழ்வு முழுவதும் ஒரே பகுதியில் அதிக ஓவர்களை வீசுவார். நீங்கள் அதிக நேரம் பந்து வீச, வீச உங்கள் உடல் மற்றும் சதை அதற்கு ஏற்ப மாறிவிடும். எனவே, பணிச் சுமை நிர்வாகம் என்ற விஷயத்தை நான் ஏற்க மாட்டேன்." என்றார் பல்வீந்தர் சிங் சாந்து.