மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான பும்ராவுக்கு காயம் ஏற்பட்டு இருப்பதாக முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேமியன் பிளமிங் பீதியை கிளப்பி இருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக இருக்கும் பும்ரா தன்னுடைய பந்துவீச்சு மூலம் ஆட்டத்தை தனியாக மாற்றக்கூடியவராக இருக்கிறார்.
பும்ரா முதல் டெஸ்ட் போட்டியில் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 61 ரன்களை விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த தொடரில் 12 விக்கெட்டுகளில் வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார்.

இந்த நிலையில் பும்ராவுக்கு காயம் ஏற்பட்டிருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேமியன் பிளமிங் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் அடிலெய்ட், டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸ்க்கு பிறகு பும்ரா ஒரு மாதிரி நொண்டிக்கொண்டே நடந்து வந்தார்.ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் மீண்டும் பந்து வீசினார். எனினும் இரண்டாவது இன்னிங்ஸில் 120 கிலோமீட்டர் வேகத்தில் தான் அவர் பந்து வீசியதை நான் பார்த்தேன்.
இரண்டாவது இன்னிங்ஸில் அவர் எத்தனை ஓவர்கள் வீசினார் என்று கூட எனக்கு ஞாபகம் இல்லை. இதன் மூலம் பும்ராவுக்கு காயம் ஏற்பட்டிருக்கும் ரகசியம் அனைவருக்கும் தெரிந்து விட்டது என நினைக்கின்றேன். 18 ரன்களை மட்டுமே ஆஸ்திரேலிய அணி சேஸ் செய்யப்போகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் பும்ராவை ஏன் ஓவர் வீச ரோகித் சர்மா அழைத்தார் என்று தெரியவில்லை.
இதன் மூலம் பும்ராவுக்கு ஏற்பட்ட காயம் மேலும் அதிகரித்திருக்கலாம். பும்ராவை ஓவர் வீசாமல் சொல்லி அவருக்கு ஏற்பட்டிருந்த காயத்தை இந்திய அணி மறைத்திருக்கலாம். ஆனால் இந்திய அணி தவறு செய்து விட்டது என்று டேமியன் பிளமிங் தெரிவித்துள்ளார். இதேபோன்று இன்று நடைபெற்ற பயிற்சி முகாமில் பும்ரா கலந்து கொள்ளவில்லை. எனினும் விராட் கோலி இந்த பயிற்சி முகாமில் கலந்துகொண்டு பேட்டிங் மட்டும் செய்யாமல் பந்து வீச்சிலும் பயிற்சி மேற்கொண்டார்.
பும்ராவை போல் சிராஜும் இந்த பயிற்சி முகாமில் பங்கேற்கவில்லை. எனினும் சிராஜ் தான் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்யப் போவதாக ஆஸ்திரேலியா ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பும்ரா ஹோட்டல் ரூமை விட்டு வெளியே வராததால், அவர் வரும் 14ஆம் தேதி தொடங்கும் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.