மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ராவுக்கு முதுகு தசை பிடிப்பு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்டின் 2வது இன்னிங்ஸில் பவுலிங் செய்ய களமிறங்காத நிலையில், அவரால் எப்போது மீண்டும் கிரிக்கெட் திரும்ப முடியும் என்ற தகவல் கிடைத்துள்ளது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்திருந்தாலும், கேப்டன் பும்ராவின் செயல்பாடுகள் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. 9 இன்னிங்ஸில் விளையாடிய பும்ரா மொத்தமாக 32 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இந்த டெஸ்ட் தொடரில் 150 ஓவர்களுக்கு மேல் பவுலிங் செய்து பலரையும் வியக்க வைத்தார்.

இதனிடையே கடைசி டெஸ்ட் போட்டியின் போது பும்ராவுக்கு முதுகு தசை பிடிப்பு பிரச்சனை வந்தது. இதன்பின் உடனடியாக ஆட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு ஸ்கேன் சோதனை செய்யப்பட்டார். தொடர்ந்து பும்ராவுக்கு காயம் உறுதியான நிலையில், 2வது இன்னிங்ஸில் அவர் பவுலிங் செய்ய களமிறங்கவில்லை.
இதனால் இந்திய அணி ரசிகர்கள் கவலையடைந்தனர். இதனிடையே அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கவுள்ள நிலையில், பும்ராவுக்கு ஏற்பட்டுள்ள காயத்தின் தன்மை என்ன, அவர் எப்போது கிரிக்கெட் களத்திற்கு திரும்புவார் என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இதனிடையே இங்கிலாந்து டி20 மற்றும் ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது.
பும்ரா இல்லாமல் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை கொடுக்கும். இந்த நிலையில் பும்ராவின் காயம் குறித்து விசாரித்த போது, பும்ராவுக்கு ஏற்பட்டுள்ள முதுகு தசை பிடிப்பின் தன்மை குறித்து முழுமையாக அறியப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. ஸ்கேன் பரிசோதனை முடிவுகள் வந்துள்ள நிலையில், இந்தியாவுக்கு வந்த பிறகே சிகிச்சைகள் தொடங்கப்படவுள்ளது.
ஒருவேளை பும்ராவுக்கு கிரேடு 1 காயம் என்றால், அவர் குறைந்தபட்சம் 3 வாரங்கள் வரை ஓய்வில் இருந்துவிட்டு பயிற்சியை தொடங்க வேண்டும். இதனால் இங்கிலாந்து ஒருநாள் தொடரில் விளையாட வாய்ப்பில்லை என்று பார்க்கப்படுகிறது. இதனால் நேரடியாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்காக களமிறங்குவார்.
ஆனால் கிரேடு 2 காயம் என்றால், பும்ரா காயத்தில் இருந்து குணமடைய 6 வாரங்கள் முதல் 3 மாதம் வரை காலம் பிடிக்கும். அப்படி இருந்தால், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பும்ரா விளையாடும் வாய்ப்புகள் மிகக்குறைவு. இதனால் பும்ரா கிரிக்கெட் களம் திரும்புவது அவர் காயத்தின் தன்மையை பொறுத்தே முடிவு செய்யப்படும் என்று பார்க்கப்படுகிறது.