சின்னப் பையன்.. என்ன விளையாடுவானு நினைச்சாங்க.. விராட் கோலி கொடுத்த பாராட்டு.. நிதிஷ் ரெட்டி பேட்டி!
மெல்போர்ன்: ஐபிஎல் விளையாடிய சிறுவனால் ஆஸ்திரேலியா மண்ணில் என்ன செய்ய முடியும் என்று பலரும் சந்தேகம் கொண்டதாக இந்திய வீரர் நிதிஷ் குமார் ரெட்டி தெரிவித்துள்ளார். அவர்களின் எண்ணம் தவறு என்று நிரூபிக்க முடிவு எடுத்ததாக கூறிய அவர், இந்திய அணிக்காக 100 சதவிகித ஆட்டத்தையும் வெளிப்படுத்தவே ஆஸ்திரேலியா வந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
மெல்போர்னில் நடந்து வரும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி கடைசி நாளுக்கு நகர்ந்துள்ளது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 474 ரன்கள் குவித்த பின், இந்திய அணி 2வது நாள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்தது. இதன்பின் 221 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த போது, இந்திய அணி கதை முடிந்தது என்று ரசிகர்கள் புலம்பினர்.

ஆனால் வாஷிங்டன் சுந்தர் - நிதிஷ் குமார் ரெட்டி இருவரும் இணைந்து 127 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணி கம்பேக் கொடுக்க காரணமாக அமைந்தனர். சிறப்பாக ஆடிய நிதிஷ் குமார் ரெட்டி சதம் விளாசியதோடு, 4வது நாளில் இந்திய அணியின் ஸ்கோரை 369 ரன்களுக்கு கொண்டு சென்றார். இறுதியாக 189 பந்துகளில் 114 ரன்களை எடுத்து நிதிஷ் குமார் ரெட்டி ஆட்டமிழந்தார்.
இதன்பின் ஆஸ்திரேலியா அணி 4வது நாள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 228 ரன்களை சேர்த்துள்ளது. இதனால் அந்த அணியின் முன்னிலை 333 ரன்களாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து நிதிஷ் குமார் ரெட்டி பேசுகையில், ஐபிஎல் தொடரில் ஆடிய இளம் வீரரால் ஆஸ்திரேலியா மண்ணில் நடக்கும் டெஸ்ட் தொடரில் என்ன செய்துவிட முடியும் என்று என் திறமை மீது பலரும் சந்தேகம் கொண்டனர்.
அப்படியே பேசிய பலரை நானும் கவனித்தேன். என்னை பற்றிய அவர்களின் கருத்து தவறானது என்பதை புரிய வைக்க முடிவு செய்தேன். அதேபோல் இந்திய அணிக்காக 100 சதவிகித உழைப்பையும் கொடுக்கவே இங்கு வந்துள்ளேன். இதற்காக சில மாதங்களாக உழைக்கவில்லை. கடந்த 2 முதல் 3 ஆண்டுகளாக பேட்டிங் மற்றும் பவுலிங்கில் பணியாற்றி வந்துள்ளேன்.
என் முதல் ஐபிஎல் சீசனுக்கு பின் பேட்டிங்கில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று நினைத்தேன். அதற்கான ஒரு திட்டத்தை தயார் செய்து பயிற்சியை தொடங்கினேன். 18 அடிகள் 145 கிமீ வேகத்தில் வீசிய த்ரோ டவுன் ஸ்பெஷலிஸ்ட் மூலம் பயிற்சி மேற்கொண்டேன். அதற்கான பலன் இப்போது கிடைத்து வருகிறது. அதேபோல் சிறுவயதில் இருந்தே நான் விராட் கோலியின் தீவிர ரசிகன்.
எனது ரோல் மாடல் அவர் தான். ஒரு வழியாக அவருடன் இணைந்து விளையாடிவிட்டேன். பெர்த் மைதானத்தில் அவர் சதமடித்த போது, மறுமுனையில் நான் நின்றிருந்தேன். அதுவே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது. இப்போது நான் சதம் விளாசிய போது, அவர் எழுந்து நின்று பாராட்டி இருக்கிறார். ஓய்வறைக்கு சென்ற போது, மிகச்சிறப்பாக விளையாடினாய்..
இந்திய அணியை மீண்டு ஆட்டத்திற்குள் கொண்டு வந்துவிட்டாய் என்று கூறினார். அது என் மிகச்சிறந்த தருணங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. நாளைய ஆட்டத்தை பொறுத்தவரை ஆஸ்திரேலியா அணியின் கடைசி விக்கெட்டை வீழ்த்த வேண்டும். அதன்பின் நிச்சயம் நாங்கள் கம்பேக் கொடுப்போம். முதல் இன்னிங்ஸில் செய்த தவறுகளை சரி செய்து 2வது இன்னிங்ஸில் ஆடுவோம் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications