சச்சினை விட 5 ஆயிரம் ரன்கள் சர்வதேச கிரிக்கெட்டில் அதிகம் அடித்திருப்பேன்.. ஆஸி. வீரர் ஹஸி பேச்சு
அடிலெய்ட்: சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்றால் அது சச்சின் டெண்டுல்கர் தான். 16 வயதிலேயே சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்து விளையாடி வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் 34,357 ரன்கள் அடித்துள்ள சச்சின் டெண்டுல்கர் 100 சதம் அடித்துள்ளார்.
இந்த நிலையில் சச்சினை போல் தாமும் இளம் வயதிலேயே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தொடங்கியிருந்தால் அவரைவிட 5000 ரன்கள் கூட அடித்திருப்பேன் என மைக்கேல் ஹசி கூறி இருக்கிறார். இது குறித்து பேசிய அவர், நான் இது குறித்து பலமுறை யோசித்து இருக்கின்றேன்.

நான் என்னுடைய 28 வது வயதில்தான் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தேன். நான் மட்டும் சச்சினை போல் ஒரு பத்து ஆண்டுகள் முன்பே விளையாடி இருந்து இருந்தால் அவரைவிட நான் ஐந்தாயிரம் ரன்கள் அதிகம் அடித்திருப்பேன். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள், அதிக சதம், அதிக வெற்றி அதிக ஆசஸ் வெற்றி, அதிக உலக கோப்பை என அனைத்திலும் அதிகமாக பெற்றிருப்பேன்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக அப்படி எதுவும் நடக்கவில்லை. காலையில் எழுந்தால், அது அனைத்தும் கனவு என்று பிறகு தான் தெரிகிறது. சச்சினை போல் எனக்கும் முன்பே வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். ஆனால் நான் எப்போது தேர்வு செய்யப்பட்டேனோ அதுதான் எனக்கு நல்லதாக அமைந்திருக்கிறது என்று ஹஸி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரராக அறியப்பட்ட ஹஸி, சர்வதேச கிரிக்கெட்டில் 324 இன்னிங்ஸ் விளையாடி 12,398 ரன்கள் அடித்திருந்தார்.
இதில் 22 சதம், 72 அரை சதம் அடங்கும். ஹசி உள்ளூர் கிரிக்கெட்டில் மொத்தமாக 23,000 ரன்கள் அடித்திருந்தார். இதில் 61 சதம் அடங்கும். ஹஸ்ஸியின் இந்த பேட்டியில் அவர் சீரியஸாக சொல்லவில்லை என்றும், வெறும் நகைச்சுவைக்காக தான் இவ்வாறு கூறினார் என்றும் தற்போது தெரியவந்துள்ளது. இதனால் சச்சின் ரசிகர்கள் சாதாரணமாக கடந்து சென்றுவிட்டனர். இன்னும் சிலர் தங்களது கிரிக்கெட் வாழ்க்கை சிறப்பாக தான் அமைந்திருக்கிறது என்றாலும் சச்சினை போல் 24 ஆண்டுகள் கிரிக்கெட்டில் கோலோச்சுவது என்பது சிரமம் என்று தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications