மெல்போர்ன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் பிளேயிங் லெவனில் இருந்து முகமது சிராஜை நீக்க வேண்டும் என்று இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார். முகமது சிராஜை நீக்கிய பின், அவர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாலேயே நீக்கப்பட்டார் என்பதையும் தெளிவாக கூற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் ஆதிக்கம் தொடர்ந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 474 ரன்களை குவித்த நிலையில், இந்திய அணி 2வது நாள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கிறது. இதன் காரணமாக இந்திய அணி 310 ரன்கள் பின் தங்கியுள்ளது.

இதனால் நாளைய ஆட்டத்தில் இந்திய அணி ஜடேஜா, ரிஷப் பண்ட், நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய 4 பேரையும் நம்பியே இருக்கிறது. பந்து நன்றாக தேய்மானம் அடைந்திருப்பதால், எளிதாக ரன்களை சேர்க்க முடியும் என்று பார்க்கப்படுகிறது. இதனிடையே 2வது நாளில் இந்திய அணியின் பவுலர்களின் செயல்பாடுகள் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
ஏனென்றால் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான முகமது சிராஜ் 23 ஓவர்களை வீசி 122 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தவில்லை. இந்திய மண்ணில் தான் அவர் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறினார் என்று நினைத்தால், வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஆஸ்திரேலியா மண்ணிலும் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் திண்டாடி வருகிறார்.
இதுகுறித்து இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பேசுகையில், முகமது சிராஜ்-க்கு சிறிது காலம் ஓய்வளிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஓய்வு என்றால், வீட்டில் ஓய்வளிப்பது அல்ல. இந்திய அணியில் எதிர்பார்த்த அளவிற்கு செயல்படாததால், நீக்கப்பட வேண்டும். சில நேரங்களில் தட்டிக் கொடுத்து வேலை வாங்க முடியாது. அந்த நேரத்தில் முகத்திற்கு நேராக தவறை சுட்டிக் காட்டி புரிய வைக்க வேண்டும்.
முகமது சிராஜ் எதிர்பார்த்த அளவிற்கு செயல்படவில்லை என்பதால், அவர் நீக்கப்பட்டுள்ளார் என்பதை சொல்ல வேண்டும். ஏனென்றால் இப்போது ஓய்வு என்று சொல்லும் போது, வீரர்கள் தவறாக புரிந்து கொள்கின்றனர். அவர்களின் ஆட்டம் போதுமானதாக இல்லை என்று வீரர்கள் உணர வேண்டும். வேகப்பந்துவீச்சாளர்களுக்கு உதவியான பிட்சில் கூட சிறப்பாக செயல்படவில்லை என்று கூறுங்கள்.
பும்ராவுக்கு உதவி செய்யக் கூடிய மாற்றங்களை அணியில் செய்யுங்கள். பிரசித் கிருஷ்ணா மற்றும் ஹர்சித் ராணா இருவரும் இருக்கிறார்கள் என்று அறிவுறுத்தியுள்ளார். இந்திய அணியின் பும்ரா இந்த டெஸ்ட் தொடரில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நிலையில், முகமது சிராஜ் 13 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருக்கிறார். இதனால் அடுத்த போட்டியில் அவர் நீக்கப்படுவது சரியான முடிவாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.