பெர்த்: இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் தொடங்க உள்ள நிலையில், இந்திய ஜாம்பவான்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் எதிர்காலம் குறித்துப் பேசிய ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட், அவர்களை நாசூக்காக கலாய்த்தார். மேலும், இந்திய வீரர் அக்சர் படேலையே தனது கலாய்ப்புக்கு உடந்தையாக்கிக் கொண்ட சம்பவம், அரங்கேறியது
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டிக்கு முன்னதாக, இரு அணி வீரர்கள் கலந்துகொண்ட செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில், ஆஸ்திரேலியா சார்பில் டிராவிஸ் ஹெட்டும், இந்தியா சார்பில் அக்சர் படேலும் பங்கேற்றனர்.
அப்போது, பத்திரிகையாளர் ஒருவர், கோலி மற்றும் ரோஹித்தின் எதிர்காலம் குறித்து ஹெட்டிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெட், இருவரையும் புகழ்ந்து பேசத் தொடங்கினார். "அவர்கள் இருவரும் இந்தியாவிற்கு அற்புதமான பங்களிப்பை அளித்துள்ளனர். என்னை விட அக்சர் அவர்களைப் பற்றி இன்னும் உயர்வாகப் பேசுவார் என்று நினைக்கிறேன். இருவரும் தலைசிறந்த வீரர்கள். விராட், ஒருவேளை வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக இருக்கலாம். ரோஹித்தும் அவருக்குப் பின்தங்கியவர் அல்ல" என்று ஹெட் புகழ்ந்தார்.

அவர்களை புகழ்ந்து பேசிக்கொண்டிருந்த ஹெட், திடீரென தனது பேச்சின் தொனியை மாற்றி, ஒருவித குறும்புடன் அக்சர் படேலைப் பார்த்தார். "ஒரு கட்டத்தில் அவர்கள் நிச்சயம் மிஸ் செய்யப்படுவார்கள். ஆனால், நான் நினைக்கிறேன், அவர்கள் இருவரும் 2027 வரைக்கும் ஆடுவார்கள் போல," என்று கூறிய ஹெட், அக்சர் படேலைப் பார்த்து ஒருவித நையாண்டியாக சிரித்தார். ஹெட்டின் இந்தக் கலாய்ப்பைப் புரிந்துகொண்ட அக்சர் படேலும், பதிலுக்கு சிரித்தார்.
36 வயதான கோலியும், 38 வயதான ரோஹித்தும் 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடுவார்களா என்ற விவாதம் தீவிரமாக நடந்து வருகிறது. டெஸ்ட் மற்றும் டி20-யிலிருந்து ஓய்வு பெற்று, ஒருநாள் கேப்டன் பதவியும் ரோஹித்திடமிருந்து பறிக்கப்பட்ட நிலையில், அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்தச் சூழலில், எதிரணி வீரரான டிராவிஸ் ஹெட், இந்திய வீரர் அக்சர் படேலையே அருகில் வைத்துக்கொண்டு, அவர்களைக் கலாய்த்து இருக்கிறார்.
டிராவிஸ் ஹெட்டின் கலாய்ப்புக்குப் பிறகு பேசிய அக்சர் படேல், "அவர்கள் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள். அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும், அவர்கள் களமிறங்கத் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் தொழில்முறை வீரர்கள். அவர்களின் ஃபார்ம் குறித்துப் பேசினால், அவர்கள் நன்றாகத் தயாராகி வருகிறார்கள். அதனால், அவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்றே நான் நினைக்கிறேன்" என்று தெரிவித்தார்.
ஒருபுறம் எதிர்காலம் குறித்த தீவிரமான விவாதங்கள் நடந்தாலும், மறுபுறம் வீரர்கள் இது போன்ற கலகலப்பான தருணங்களைப் பகிர்ந்துகொள்வது, கிரிக்கெட்டின் ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது. இருப்பினும், டிராவிஸ் ஹெட்டின் இந்தக் கலாய்ப்புக்கு, கோலியும், ரோஹித்தும் தங்களது பேட்டால் களத்தில் பதிலடி கொடுப்பார்களா என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.