இந்திய அணியிடம் 2 அசாத்திய வீரர்கள் உள்ளனர்.. பேட் கம்மின்ஸ் என்ன செய்யப் போகிறார்? வாட்சன் பேட்டி!
சிட்னி: இந்திய அணியில் ரஹானே, புஜாரா போன்ற அனுபவ வீரர்கள் இல்லையென்றாலும், அவர்களுக்கு நிகரான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வீரர்கள் இடம்பெற்றுள்ளதாக ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். அதேபோல் ரிஷப் பண்ட் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா இருவரையும் ஆஸ்திரேலியா அணி எப்படி சமாளிக்கும் என்பது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. அதற்காக ஆஸ்திரேலியா அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்திய அணியை பொறுத்தவரை கடந்த 2 முறையும் ஆஸ்திரேலியா மண்ணிலேயே வைத்து டெஸ்ட் தொடரை வென்று புதிய வரலாறு படைத்தது.

அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் புஜாரா. ஏனென்றால் ஆஸ்திரேலியா மண்ணில் 15 இன்னிங்ஸ்களில் விளையாடிய புஜாரா, 2,1896 பந்துகளை எதிர்கொண்டு 792 ரன்களை விளாசினார். தற்போது புஜாராவின் இடத்தை எந்த வீரரை கொண்டு இந்திய அணி நிரப்பப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கேள்விக்கு ஆஸ்திரேலியா ஜாம்பவான் ஷேன் வாட்சனே பதில் அளித்திருப்பது கூடுதல் சுவாரஸ்யத்தை அளித்துள்ளது.
அதில், ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை முன்னிட்டு இந்திய அணியின் பேட்டிங் பெரியளவில் மாற்றங்கள் செய்யப்படவில்லை என்றே நினைக்கிறேன். கடந்த 2 சுற்றுப்பயணத்திலும் புஜாரா இருந்தார். பேட்டிங்கில் தவறுகளையே செய்யாத வீரர் என்ற சொல்லலாம். தற்போது இந்திய அணியின் புஜாராவின் ஸ்டைலில் இல்லையென்றாலும், தவறுகள் செய்யாத ஜெய்ஸ்வால் போன்ற வீரர் டாப் ஆர்டரில் இருந்து வருகிறார்.

11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஏராளமான சதங்கள், அரைசதங்கள் விளாசியதன் மூலம் ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். அதிலும் ஜெய்ஸ்வாலின் ஸ்ட்ரைக் ரேட் 71.67ஆக உள்ளது. அவரால் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அதிரடியாக ரன்களை குவிக்க முடிகிறது. அவர் எதிரணிக்கு அதிகளவிலான வாய்ப்புகளையும் அளிப்பதில்லை. இன்னொரு பக்கம் ரிஷப் பண்ட் மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்துள்ளார்.
இந்திய பேட்ஸ்மேன்களின் திறமையும், நம்பிக்கையும் உச்சத்தில் உள்ளது. அவை இரண்டையும் இணைக்கும் பட்சத்தில், தவறுகள் நடப்பதே குறைவாகிவிட்டது. ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியா மண்ணில் தன்னால் என்ன செய்ய முடியும் என்பதை நிரூபித்துவிட்டார். அவருக்கு பெரியளவில் வீக்னஸ் என்று எதுவும் கிடையாது. 12 இன்னிங்ஸ்களில் விளையாடி 624 ரன்களை விளாசி இருக்கிறார்.
கடந்த முறை சிறப்பாக விளையாடியதன் மூலமாக, அதே நம்பிக்கையுடன் ரிஷப் பண்ட் விளையாடுவார். காபா மைதானத்தில் ரிஷப் பண்ட் ஆடிய ஆட்டம் என்றும் ஸ்பெஷலானது. அதனால் ரிஷப் பண்ட்-க்கு மிகப்பெரிய டெஸ்ட் தொடர் காத்திருப்பதாகவே நினைக்கிறேன். இன்னொரு பக்கம் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இருக்கிறார்.
ஆஸ்திரேலியா மண்ணில் மட்டுமல்லாமல், உலகின் எந்த மைதானத்திலும் சிறப்பாக பவுலிங் செய்யக் கூடியவர். பும்ராவிடம் பேட்ஸ்மேன்களை வீழ்த்தும் திறன் இருக்கிறது. ரிஷப் பண்ட் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா இருவருமே அசாத்தியங்களை சாத்தியமாக்கக் கூடிய வீரர்கள். நிச்சயம் ஆஸ்திரேலியா அணிக்கு சிக்கலை கொடுப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications