அடிலெய்டு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், ரோஹித் சர்மாவின் பேட்டிங் சுயநலமாக இருந்ததாக கடும் விமர்சனம் எழுந்துள்ளது. கேப்டன் சுப்மன் கில் மற்றும் மூத்த வீரர் விராட் கோலி அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில், அணியைக் கரைசேர்க்க வேண்டிய ரோஹித் சர்மா, தனது இயல்பான அதிரடி ஆட்டத்தை முற்றிலுமாக கைவிட்டு, மிகவும் மந்தமான டெஸ்ட் ஆட்டத்தை வெளிப்படுத்தியது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் பின் அவர் அரைசதம் அடித்தாலும் அவரால் மற்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு சிக்கல் எழுந்தததாக விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.
இது அணியைக் காப்பாற்றும் முயற்சியில் ஒரு தற்காப்பு ஆட்டமா அல்லது தனது விக்கெட்டைக் காப்பாற்றிக் கொள்ள ஆடிய சுயநலமான ஆட்டமா என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக முதல் ஐந்து ஓவர்களில் 24 பந்துகளை சந்தித்து வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார் ரோஹித் சர்மா. மறுமுனையில் சுப்மன் கில் 9 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரோஹித் ரன் எடுக்காததால் தன் மீது அழுத்தம் அதிகரித்ததால் தான் கில் ஆட்டமிழந்தார் என சிலர் ரோஹித் மீது குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இந்தப் போட்டியின் தொடக்கம் முதலே ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட், ரோஹித் சர்மாவுக்குக் கடும் நெருக்கடி கொடுத்தார். இந்தத் தொடரில் இதுவரை ஹேசில்வுட் வீசிய 20 பந்துகளில் ரோஹித் ஒரு ரன் கூட எடுக்கவில்லை என்பது அவரது திணறலை அப்பட்டமாகக் காட்டியது. இன்றைய போட்டியிலும், ஹேசில்வுட்டுக்கு எதிராக இரண்டு மெய்டன் ஓவர்களை ரோஹித் எதிர்கொண்டார். இதனால், ரன் ரேட் அதலபாதாளத்திற்குச் சென்றது.
2023 ஆம் ஆண்டிலிருந்து ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மா முற்றிலும் மாறுபட்ட, அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்தக் காலகட்டத்தில் அவர் 64 சராசரியுடன், 122 என்ற அபாரமான ஸ்ட்ரைக் ரேட்டில் 1154 ரன்களைக் குவித்துள்ளார். அணியின் ஸ்கோருக்காக தனது விக்கெட் போனாலும் பரவாயில்லை என முதல் பந்திலிருந்தே தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.
ஆனால், இந்த ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வெறும் 8 ரன்களில் ஆட்டமிழந்ததால் ஏற்பட்ட அழுத்தமோ என்னவோ, இரண்டாவது போட்டியில் தனது அணுகுமுறையை முற்றிலுமாக மாற்றிக்கொண்டார் ரோஹித் சர்மா. அதனால் ரன் குவிக்கவில்லை என்றால் அணியில் தனது இடம் பறிபோய்விடும் என்ற அச்சத்தால் ரோஹித் இவ்வாறு ஆடினாரா? என்ற கேள்வியும் எழுகிறது. கோலி டக் அவுட் ஆன பின்னும் தனது மந்தமான ஆட்டத்தை ரோஹித் மாற்றிக் கொள்ளவில்லை.
தனது இன்னிங்ஸின் முதல் 20 பந்துகளில் ரோஹித் வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்தார். கடந்த ஆறு ஆண்டுகளில் ஒருநாள் போட்டியில் இதுவே அவரது மிக மெதுவான தொடக்கமாகும். ஆட்டத்தின் 8 ஓவர்கள் முடிவில், ரோஹித் 34 பந்துகளைச் சந்தித்து வெறும் 13 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இது ஒருநாள் போட்டிக்குச் சற்றும் பொருந்தாத மந்தமான தொடக்கமாகும். டெஸ்ட் போட்டி போல ஆடி இருந்தார். முக்கிய ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களான ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் மற்றும் விக்கெட்களை வீழ்த்திய சேவியர் ஆகியோரின் ஓவர்கள் முடிந்த பின்னரே ரோஹித் ஓரளவு விரைவாக ரன் சேர்த்தார். பின்னர் அரைசதம் அடித்தார்.
சுப்மன் கில் மற்றும் விராட் கோலியின் விக்கெட்டுகள் விழுந்த பிறகு, இன்னிங்ஸை நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பு ரோஹித்திடம் இருந்தது உண்மைதான். ஆனால், ரன் எடுக்கவே முயற்சிக்காமல், அதிக பந்துகளை வீணடித்தது எதிர்முனையில் வரும் பேட்ஸ்மேன்களுக்குப் பெரும் அழுத்தத்தை உருவாக்கும். முதல் போட்டியில் தோல்வியடைந்ததால், இந்தப் போட்டியில் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும் என்ற தனிப்பட்ட நோக்கத்திற்காக அவர் சுயநலமாக ஆடினாரா என்ற விமர்சனத்தை அவரது இந்த மந்தமான ஆட்டம் எழுப்பியுள்ளது. மறுபுறம் அவர் அரைசதம் அடித்ததை சுட்டிக் காட்டி ஆஸ்திரேலியாவில் இப்படி தான் ஆட வேண்டும் என சிலரும் அவருக்கு ஆதரவு அளித்து பேசி வருகின்றனர்.