IND vs AUS- எல்லா ஓவர்களையும் பும்ராவே வீச முடியுமா? எல்லோரும் பொறுப்பை உணரனும்- ரோகித் சாடல்
மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில் இந்திய அணி வீரர்கள் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும் என ரோகித் சர்மா கூறியுள்ளார்.
முதல் டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் படுதோல்வியை தழுவி இருக்கிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, தற்போது நாங்கள் ஐந்தாவது டெஸ்ட் போட்டி குறித்து யோசிக்கவில்லை. பிரிஸ்பேனில் அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்பதுதான் எங்களுடைய நினைப்பாக இருக்கின்றது.

பும்ரா போன்ற ஒரு வீரர் அணியில் இருப்பது மிகவும் நல்ல விஷயம். ஆனால் வெற்றிக்குத் தேவையான வேலையை அவர் மட்டும் செய்வார் என்று நினைப்பது தவறு. பும்ராவுடன் இணைந்து சிராஜ் நல்ல முறையில் பந்து வீசி நான்கு விக்கெட்டுகளை எடுத்தார். பவுலர்களுக்கான பொறுப்பை இருவரும் பகிர்ந்து கொண்டார்கள்.
அனைத்து நேரமும் பும்ராவே விக்கெட்டை எடுப்பார் என்று நினைக்கக் கூடாது. மற்ற வீரர்களும் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும். பும்ரா பந்து வீசும் போது நான் அவருடன் பேசிக்கொண்டு இருந்தேன். உங்களுடைய உடல் தகுதி எப்படி இருக்கிறது? சோர்வாக இருக்கிறீர்களா என்றெல்லாம் நான் கேட்டேன்.
ஏனென்றால் இது 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர். எங்களுக்கு பும்ரா புத்துணர்ச்சியுடன் இருந்தால் மட்டுமே விக்கெட்டுகள் கிடைக்கும். எனவே பும்ராவின் பணிச்சுமையை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். காலையில் இருந்து மாலை வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் அனைத்து ஓவர்களையும் பும்ராவே வீசுவார் என்று நினைப்பது தவறு.
எனவே மற்ற பவுலர்களும் விக்கெட்டுகளை எடுக்க வேண்டும். இதேபோன்று பேட்ஸ்மேன்களில் குறிப்பிட்ட வீரர்கள் மட்டும் அனைத்து நேரமும் ரன்கள் சேர்ப்பார்கள் என நினைக்கக் கூடாது. அணியில் உள்ள அனைத்து பேட்ஸ்மேன்களும் இதை புரிந்து கொள்ள வேண்டும்.
டெஸ்ட் தொடரை நீங்கள் வெல்ல வேண்டும் என்றால் அனைவரும் பொறுப்பை பகிர்ந்து கொண்டு அணிக்காக உங்கள் வேலையை சரியாக செய்ய வேண்டும். இதை எங்கள் வீரர்கள் பலமுறை செய்திருக்கிறார்கள். இனியும் செய்வார்கள் என்று நம்புகிறேன் என கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
Story first published: Sunday, December 8, 2024, 19:33 [IST]
Other articles published on Dec 8, 2024


Click it and Unblock the Notifications