மும்பை : 142 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் யாருமே செய்யாத ஒரு மோசமான சாதனையை இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா படைத்திருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டது.
இதில் ரோகித் சர்மா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து தான் பங்கேற்றார். இந்த தொடரில் ரோகித் சர்மா 6 இன்னிங்ஸ் விளையாடி இருக்கிறார். இதில் ஒரு முறை கூட ரோகித் சர்மா 10 ரன்களை தாண்டவில்லை. அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் 3,6 ரன்களும், பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் 10 ரன்களும், டெஸ்ட் போட்டியில் 3, 9 ரன்கள் என மோசமாக ரோகித் சர்மா விளையாடி இருக்கிறார்.

பும்ரா இந்த தொடரில் 30 விக்கெட்டுகளை எடுத்துள்ள நிலையில் ரோகித் சர்மா பேட்டிங்கில் வெறும் 31 ரன்கள் மட்டும் தான் எடுத்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ரோகித் சர்மா மட்டும் ஒரு இரண்டு அரை சதம் அடித்து இருந்தாலும், நிச்சயம் இந்திய அணிக்கு அது மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தி இருக்கும்.
கடந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு ரோகித் சர்மா சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது கூட அவர் மூன்று அரைசதம் நடுவரிசையில் களம் இறங்கி அடித்தார். ஆனால் அப்படிப்பட்ட ஒரு இன்னிங்ஸை ரோகித் சர்மா ஆடுவதில்லை. இதன் மூலம் ரோகித் சர்மாவுக்கு மிகப்பெரிய ஒரு அவமானம் கிடைத்திருக்கிறது. அதாவது ஆஸ்திரேலியாவுக்கு 140 ஆண்டுகளுக்கு மேலாக கேப்டன்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்கள்.
இதில் குறைந்தபட்சம் ஐந்து இன்னிங்ஸில் விளையாடிய கேப்டன்களில் பேட்டிங்கில் மிகவும் குறைந்த சராசரி வைத்திருந்த கேப்டன் என்றால் அது ரோகித் சர்மா தான். 1882- 83 ஆம் ஆண்டு சுற்றுப்பயணத்தின் போது, இவோ பிலிக் என்ற கேப்டன் ஆஸ்திரேலியாவில் வெறும் 8.25 என்ற சராசரியை வைத்திருந்தார்.அதன் பிறகு 1924 ஆம் ஆண்டு சுற்றுப்பயணத்தின் போது ஆத்தர் கில்லிகன் என்ற கேப்டன் 9.14 என்ற சராசரியை பேட்டிங்கில் வைத்திருந்தார். 2022-23 சுற்றுப்பயணத்தில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டீன் ஏல்கர் 9.33 என்ற பேட்டிங் சராசரியை வைத்திருந்தார்.
1996 97 சுற்றுப்பயணத்தின் போது வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் கோட்னிவால்ஷ் 7.75 என்ற சராசரியை வைத்திருந்தார். இந்த 142 ஆண்டு கால வரலாற்றில் இருப்பதிலேயே குறைந்த சராசரி வைத்திருக்கும் கேப்டன் என்றால் அது ரோகித் சர்மா தான். ரோகித் சர்மா வெறும் 6.20 என்ற சராசரியை வைத்திருக்கிறார். இந்த மோசமான சாதனையிலிருந்து ரோகித் சர்மா தப்பிக்க வேண்டும் என்றால் சிட்னி டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து ஆக வேண்டும்.