சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா சதம் விளாசி அசத்திய நிலையில், விராட் கோலி அரை சதம் அடித்தார்.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஆஸ்திரேலியா அணி இரண்டுக்கும் பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில் ஆறுதல் வெற்றிக்காக இந்திய அணி இன்று களமிறங்கியது. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இருதரப்பு தொடரில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை ஒயிட் வாஷ் செய்தது கிடையாது.

முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் தேர்வு செய்தது. அந்த அணியின் மேட் ரீன்சா அபாரமாக விளையாடி அரை சதம் அடிக்க கேப்டன் மிச்சல் மார்ஸ் 41 ரன்கள் எடுத்தார். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி பெரிய ஸ்கோர் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஹர்ஷித் ரனா தன்னுடைய அபார பந்துவீச்சு மூலம் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கை சுக்குநூறாக உடைத்தார்.
வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அபாரமாக பந்து வீசி ஆஸ்திரேலியாவை கட்டுப்படுத்த அந்த அணி 46.4 ஓவரில் 236 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய பந்துவீச்சு தரப்பில் ஹர்ஷித் ரானா 4 விக்கெட் களையும், வாஷிங்டன் சுந்தர் இரண்டு விக்கெட்டுகளையும் மற்ற வீரர்கள் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனை அடுத்து 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியில் தொடக்கவீரர் ரோகித் சர்மா மற்றும் கேப்டன் கில் விளையாடினர்.24 ரன்களில் ஆட்டம் இழக்க ரோகித் சர்மாவுடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். கடந்த இரண்டு போட்டிகளாக விராட் கோலி டக்அவுட் ஆன நிலையில், இன்று அவர் ரன் அடிப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் எதிர்கொண்ட முதல் பந்திலே அவர் ரன் எடுத்து இன்று தனது மாஸ் கம்பேக்கை காட்டினார். மறுபுறம் ரோகித் சர்மா தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரி, சிக்சர் என அடித்தார். ரோகித் சர்மா 63 பந்துகளில் அரை சதம் அடிக்க விராட் கோலி 56 பந்துகளில் அரைசதம் அடித்தார். ரோகித் தொடர்ந்து அதிரடி காட்ட 105 பந்துகளில் தன்னுடைய சதத்தை பூர்த்தி செய்தார்.
இருவரும் அதிரடி காட்ட 38.3 வது ஓவரிலேயே இந்திய அணி ஒரு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. ரோகித் சர்மா 125 பந்துகளில் 121 ரன்கள் அடித்தார். இதில் 13 பவுண்டரிகள் மூன்று சிக்சர்கள் அடங்கும்.விராட் கோலி 81 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார். இதில் 7 பவுண்டரிகள் அடங்கும்.