மும்பை : இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது.
அந்த தொடரில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்கள் பட்டியலை தேர்வுக் குழு தலைவர் அஜீத் அகர்கர் நேற்று வெளியிட்டார்.

அந்தப் பட்டியலில் முதல் இரண்டு போட்டிகளில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது. அத்துடன் மற்றொரு வீரருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்தான் குல்தீப் யாதவ். அதன் பின்னணி மிகவும் சுவாரசியமாக உள்ளது.
கோலி, ரோஹித் ஓய்வு ஏன்? : குல்தீப் யாதவ் ஓய்வு குறித்து பார்க்கும் முன் கோலி, ரோஹித்துக்கு ஏன் ஓய்வு என் பார்ப்போம். ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி ஒவ்வொரு நாள் இடைவெளியில் நடந்த போட்டிகளில் பங்கேற்றது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி ரிசர்வ் நாளுக்கு சென்ற பின், அதற்கு அடுத்த நாளே இலங்கை அணிக்கு எதிரான சூப்பர் 4 போட்டியில் இந்திய வீரர்கள் ஓய்வே இல்லாமல் ஆடினர்.
மற்றவர்களுக்கு வாய்ப்பு : தொடர்ந்து இந்திய அணியின் முக்கிய வீரர்கள் ஓய்வே இல்லாமல் ஆடியதால் அவர்களுக்கு உலகக்கோப்பைக்கு முன் ஒரு சிறிய ஓய்வு காலத்தை அளிப்பது எனவும், அதே சமயம், ஆசிய கோப்பையில் வாய்ப்பு பெறாத மற்ற வீரர்களுக்கு கடினமான போட்டியில் ஆடும் பயிற்சியை அளிக்கவும் முடிவு செய்து பாண்டியா, ரோஹித், கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
குல்தீப் யாதவ் ஏன்? : குல்தீப் யாதவ் ஆசிய கோப்பை தொடரில் மூன்று போட்டிகளில் மட்டுமே முழுவதுமாக பந்து வீசினார். எனினும், அவருக்கு ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் ஓய்வளிக்க முக்கிய காரணம், ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் தான். ஆம், அவர்களை கண்டு அஞ்சி தான் குல்தீப் யாதவை மூன்றாவது ஒருநாள் போட்டியில் மட்டும் ஆட வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
டெக்னிக் : பொதுவாக புதிய சுழற் பந்துவீச்சாளர்கள் சில டெக்னிக்குகளை வைத்து தான் பேட்ஸ்மேன்களை திணற வைப்பார்கள். ஆனால், குறிப்பிட்ட அளவு போட்டிகளில் ஆடிய பின் அவர்களின் டெக்னிக்கை மற்ற அணிகள் அக்குவேறு ஆணிவேராக அலசி ஆராய்ந்து அதை உடைத்து விடுவார்கள்.
குல்தீப் யாதவ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அணியில் வாய்ப்பு கிடைக்காத போது தன் டெக்னிக்குகளை மேம்படுத்திக் கொண்டார். அது இதுவரை அவருக்கு கைகொடுத்து வருகிறது. இன்னும் மற்ற அணிகள் அதை உடைக்க முயற்சி செய்யவில்லை. ஆனால், உலகக்கோப்பை தொடருக்கு முன் தொடர்ந்து மூன்று போட்டிகளில் அவர் ஆஸ்திரேலிய அணியுடன் ஆடினால், அவர்கள் அவரது பலம் - பலவீனம் குறித்து அறிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது.
ஆஸ்திரேலிய அணி அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பு உள்ள அணி. மறுபுறம், குல்தீப் யாதவின் சுழற் பந்துவீச்சு இந்திய அணிக்கு முதுகெலும்பாக இருக்கிறது. எனவே, அரை இறுதி, இறுதி போன்ற முக்கிய போட்டிகளில் குல்தீப் யாதவ் பெரிய பங்காற்றுவார். அதை கருத்தில் கொண்டு அவரை முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி ஆட வைக்கப் போவதில்லை.