அடிலெய்ட்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வெறும் 3 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். 6 ஆண்டுகளுக்கு பின் மிடில் ஆர்டரில் களமிறங்கிய அவர், கொஞ்சம் கூட பொறுப்பின்றி ஆட்டமிழந்திருப்பது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனுக்குள் கேப்டன் ரோஹித் சர்மா கம்பேக் கொடுத்தார். தொடக்க வீரராக அல்லாமல் இம்முறை மிடில் ஆர்டரில் களமிறங்குவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகி ஆட்டமிழக்க, பின்னர் கேஎல் ராகுல் 37 ரன்களிலும், விராட் கோலி 7 ரன்களிலும், சுப்மன் கில் 31 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 82 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அப்போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா - ரிஷப் பண்ட் இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு பின் ரோஹித் சர்மா மிடில் ஆர்டரில் களமிறங்கியதால், அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதேபோல் ரோஹித் சர்மாவுக்கு புதிய பந்தை எதிர்கொள்ள வேண்டிய சிக்கலும் இல்லாமல் இருந்தது.
இதனால் நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் வெளிப்படுத்திய மோசமான ஃபார்மில் இருந்து ரோஹித் சர்மா வெளி வருவார் என்று அவரின் ரசிகர்கள் நம்பிக்கை கூறி வந்தனர். ஆனால் 3 ரன்கள் எடுத்திருந்த போது, போலண்ட் வீசிய பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்து ரோஹித் சர்மா நடையைக் கட்டினார். இதனால் ரசிகர்கள் பலரும் ரோஹித் சர்மாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ஏற்கனவே ரோஹித் சர்மாவுக்கு 37 வயதாகிவிட்ட நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரின் டிஃபென்ஸ் பெரியளவில் பிரச்சனையை சந்தித்துள்ளது. இதனால் மேத்யூ ஹெய்டன் மற்றும் கில்கிறிஸ்ட் பாணியிலான அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்து ரோஹித் சர்மா விளையாடி வந்தார். ஆனால் இப்போது மிடில் ஆர்டரில் களமிறங்க முடிவு செய்துள்ளதால், ரோஹித் சர்மாவின் டெக்னிக் கூடுதல் விமர்சனத்தை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.