துபாய்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 29 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து வெளியேறி இருக்கிறார். வேகப்பந்துவீச்சாளரை அசால்ட்டாக விளாசிய தள்ளிய ரோஹித் சர்மா, வழக்கம் போல் இடதுகை ஸ்பின்னரிடம் விக்கெட்டை பறிகொடுத்து சென்றுள்ளார்.
கடந்த ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இடதுகை ஸ்பின்னர்களிடம் அதிகமாக விக்கெட்டை பறிகொடுத்தார். அந்த திட்டத்தை பயன்படுத்தி ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் ரோஹித் சர்மா விக்கெட்டை எளிதாக வீழ்த்தி இருக்கிறார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவர்களில் 264 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 73 ரன்களும், அலெக்ஸ் கேரி 61 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து இந்திய அணி தரப்பில் ரோஹித் சர்மா - சுப்மன் கில் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் சுப்மன் கில் 8 ரன்களில் போல்டாகி வெளியேற, ரோஹித் சர்மா - விராட் கோலி கூட்டணி இணைந்தது. இதன்பின் பவர் பிளேவை பயன்படுத்தி ரோஹித் சர்மா அதிரடியாக ரன்களை குவிக்க, 7 ஓவர்களில் இந்திய அணி 42 ரன்களை சேர்த்திருந்தது.
அப்போது திடீரென இடதுகை ஸ்பின்னரான கானலி கைகளில் பந்தை கொடுத்தார். அதற்கு முன்பாக டிராவிஸ் ஹெட் நேரடியாக வந்து ஸ்டீவ் ஸ்மித்திடம் சில நிமிடங்கள் பேசினார். இதன்பின் பவுலிங்கில் மாற்றம் செய்யப்பட்டது. இடதுகை ஸ்பின்னர் என்பதால் விராட் கோலி கொஞ்சம் எச்சரிக்கையுடன் விளையாடினார்.
ஆனால் அவரை அட்டாக் செய்ய முடிவு செய்து ஸ்வீப் அடிக்க முயற்சித்த ரோஹித் சர்மா, 29 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 4வது முறையாக நல்ல தொடக்கம் கிடைத்தும் ரோஹித் சர்மா அதனை பயன்படுத்தாமல் வெளியேறி இருக்கிறார். இதனால் ரசிகர்கள் ஹிட்மேனை பொளந்து கட்டி வருகின்றனர்.