IND vs AUS: வரலாறு படைத்த ரோஹித்.. ஆஸ்திரேலிய மண்ணில் எந்த இந்திய வீரரும் செய்யாத பிரம்மாண்ட சாதனை
அடிலெய்டு: இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரும், முன்னாள் கேப்டனுமான ரோஹித் சர்மா எந்த இந்திய வீரரும் இதுவரை செய்யாத பிரம்மாண்ட பேட்டிங் சாதனை ஒன்றை ஆஸ்திரேலிய மண்ணில் செய்துள்ளார். மேலும், இதுவரை உலக அளவில் ஐந்து ஜாம்பவான்கள் மட்டுமே செய்த அந்த சாதனையை செய்து, ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை இன்று படைத்துள்ளார். அடிலெய்டில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது இந்த மைல்கல்லை அவர் எட்டினார்.
அசால்டாக கடந்த ஹிட்மேன்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி தொடங்குவதற்கு முன்பு, ரோஹித் சர்மா இந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்த வெறும் 2 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. பெர்த்தில் நடந்த முதல் போட்டியில் 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்த அவர், இரண்டாவது ஒருநாள் போட்டியின் தனது இன்னிங்ஸின் தொடக்கத்திலேயே அந்த இரண்டு ரன்களை எடுத்து இந்த பிரம்மாண்ட மைல்கல்லை எட்டினார். ஆஸ்திரேலிய மண்ணில், அந்த அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்களை எட்டிய முதல் இந்தியர் என்ற பெருமையை இதன்மூலம் அவர் தன்வசப்படுத்தியுள்ளார்.

இந்திய ஜாம்பவான்களை பின்னுக்குத் தள்ளிய ரோஹித்
இந்தச் சாதனையின் மூலம், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, எம்.எஸ். தோனி போன்ற இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களை ரோஹித் சர்மா பின்தள்ளி முதலிடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் அந்த அணிக்கு எதிராக அதிக ஒருநாள் ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியல்:
- ரோஹித் சர்மா - 1000+ ரன்கள்* (21 போட்டிகளில்)
- விராட் கோலி - 802 ரன்கள்
- சச்சின் டெண்டுல்கர் - 740 ரன்கள்
- எம்.எஸ். தோனி - 684 ரன்கள்
ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவில் இதுவரை 4 சதங்கள் மற்றும் 2 அரைசதங்களை விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் ஐந்தாவது வீரர்
இந்திய அளவில் முதலிடத்தில் இருந்தாலும், உலக அளவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் 1000 ஒருநாள் ரன்களைக் கடந்த ஐந்தாவது வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார். இந்தச் சாதனைப் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸின் ஜாம்பவான்களான விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் ஆகியோருடன், இலங்கையின் குமார் சங்கக்காரா மற்றும் மஹிலா ஜெயவர்த்தனே ஆகியோர் உள்ளனர்.
- விவியன் ரிச்சர்ட்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்) - 1905 ரன்கள்
- டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்) - 1565 ரன்கள்
- குமார் சங்கக்காரா (இலங்கை) - 1171 ரன்கள்
- மஹேள ஜெயவர்த்தனே (இலங்கை) - 1013 ரன்கள்
- ரோஹித் சர்மா (இந்தியா) - 1000+ ரன்கள்*


Click it and Unblock the Notifications