சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா 125 பந்துகளுக்கு எதிர்கொண்டு 121 ரன்கள் சேர்த்தார். இந்த போட்டியில் இரண்டு கேட்ச்களையும் அவர் படித்தார். இதன் மூலம் ஆட்டநாயகன் விருது வென்ற ரோகித் சர்மா இந்த தொடரில் மொத்தமாக 202 ரன்கள் சேர்த்து தொடர் நாயகன் விருதை கைப்பற்றினார்.
இதை தொடர்ந்து பேசிய ரோகித் சர்மா, எனக்கு எப்போதுமே ஆஸ்திரேலியாவில் வந்து விளையாடுவது மிகவும் பிடிக்கும். 2008 ஆம் ஆண்டு நான் இங்கு முதல் முறையாக வந்து சர்வதேச கிரிக்கெட் போட்டி நிகழ்வில் விளையாடியது இன்னும் நினைவில் இருக்கின்றது.திரும்பவும் நான் ஆஸ்திரேலியாவுக்கு வருவேனா என்று எனக்கு தெரியாது.

இதுவே கடைசி தொடராக இருக்கலாம். நான் இங்கு விளையாடிய ஒவ்வொரு நொடியையும் மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டேன்.நாங்கள் பெர்த் ஒரு நாள் போட்டியில் ஒரு புது தொடக்கமாக தான் எங்களுக்கு அமைந்தது. அப்படி தான் நான் ஒவ்வொரு தொடரையும் அணுகுவேன்.
இங்கு பேட்டிங் செய்வது எப்போதுமே கடினமாக தான் இருக்கும். தரம் வாய்ந்த பவுலர்களை நாங்கள் எதிர்கொள்வோம். ஒவ்வொரு விஷயத்தையும் புரிந்து கொண்டு சிறந்ததை நாம் கொடுக்க வேண்டும். நான் ஐபிஎல் தொடருக்கு பிறகு பெரிய அளவில் விளையாடவில்லை. ஆனால் இந்த தொடருக்காக நன்கு நான் தயார்படுத்திக் கொண்டேன். இதன் மூலம் இந்த தொடரில் விளையாடுவது எனக்கு நம்பிக்கையை கொடுத்தது.
இந்த தொடரை எங்களால் வெல்ல முடியவில்லை. ஆனால் நிறைய நல்ல விஷயங்களை இந்த தொடர் மூலம் நாங்கள் எடுத்துக் கொள்கின்றோம். எங்கள் அணியில் இளம் வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பல விஷயங்களை கற்றுக் கொள்வார்கள். நான் இளம் வீரராக வரும்போது சீனிய்ச்ர்கள் எனக்கு எப்படி உதவினார்கள் என்று எனக்கு நன்றாக நினைவில் இருக்கின்றது.
தற்போது அதே பணியை நான் இளம் வீரர்களுக்கு செய்யப் போகிறேன். ஆஸ்திரேலியாவில் விளையாடுவது என்பது சுலபம் கிடையாது. நமது அனுபவங்களை மற்ற வீரர்களுக்கு நாம் கொடுக்க வேண்டும். போட்டிக்கான திட்டத்தை வகுக்க வேண்டும். ஆஸ்திரேலியாவில் இவ்வளவு ஆண்டுகள் விளையாடியும் திரும்பவும் நான் என்னுடைய அடிப்படை விஷயங்கள் நோக்கியே சென்றேன்.
இதை தான் இனிவரும் தலைமுறைக்கு நான் சொல்வேன். ஆஸ்திரேலியாவில் விளையாடுவது எப்போதுமே ஒரு நல்ல விஷயமாக இருக்கும். சிட்னி மைதானத்தில் எனக்கு சில நல்ல நினைவுகள் இருக்கின்றது. நான் நேசிப்பதை செய்கின்றேன். அதை தொடர்ந்து செய்வேன் என்ற நம்பிக்கை இருக்கின்றது என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.