சிட்னி: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் சீனியர் வீரரான ரோகித் சர்மா 105 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். இதன் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் 50 சதங்களை விளாசிய வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக இந்திய அணியின் சீனியர் வீரரான ரோகித் சர்மாவுக்கு பல்வேறு அழுத்தங்கள் இருந்தன. 2027 உலகக்கோப்பை வரை ரோகித் சர்மாவால் விளையாட முடியாது.. இந்த ஒருநாள் தொடருடன் ரோகித் சர்மா வீட்டிற்கு அனுப்பப்படுவார் என்றெல்லாம் பேச்சுகள் இருந்தன. ஆனால் ரோகித் சர்மா தனது பேட்டால் அனைவருக்கும் பதிலடி கொடுத்துள்ளார்.

ஏற்கனவே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 73 ரன்களை விளாசி ரோகித் சர்மா ஃபார்முக்கு திரும்பினார். இந்த நிலையில் ரோகித் சர்மாவுக்கு ராசியான சிட்னி மைதானத்தில் 3வது ஒருநாள் போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிக்கு 237 ரன்கள் இலக்காக ஆஸ்திரேலியா அணி நிர்ணயித்தது.
இதையடுத்து ரோகித் சர்மா - சுப்மன் கில் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ரோகித் சர்மா வழக்கத்திற்கு மாறாக ஆர்த்தடாக்ஸ் கிரிக்கெட் ஷாட்களை விளையாடி ஆச்சரியம் கொடுத்தார். ரோகித் சர்மாவின் ஆட்டத்தை பார்த்து வர்ணனை செய்து கொண்டிருந்த ஆஸ்திரேலியா ஜாம்பவான் ஷேன் வாட்சனும் பாராட்டி தள்ளினார்.
தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 40 ரன்கள் வரை விரைவாக சேர்த்தார். இதன்பின் விராட் கோலி களமிறங்க, பவுலர்களின் கவனம் அவர் பக்கம் திரும்பியது. இதனால் ரோகித் சர்மா எந்தவித அழுத்தமும் இல்லாமல் 63 பந்துகளில் தனது 60வது அரைசதத்தை நிறைவு செய்தார். இந்த ஒருநாள் தொடரில் பேக் டூ பேக் அரைசதம் விளாசியதோடு, அதிக ரன்கள் விளாசிய பேட்ஸ்மேன்கள் பட்டியலிலும் முதலிடத்தை பிடித்துள்ளார்.
தொடர்ந்து விராட் கோலி ஒரு பக்கம் ஆஸ்திரேலியா பவுலர்களை சமாளிக்க, மறுபக்கம் ரோகித் சர்மா சைலண்ட்டாக நின்று சிக்ஸ், பவுண்டரி என்று விளாசி தள்ளினார். இதனிடையே விராட் கோலி அரைசதம் அடிக்க, மறுபக்கம் ரோகித் சர்மா 90 ரன்களை கடந்தார். இதனால் சதம் அடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் கொஞ்சம் கூட பதற்றம் இல்லாமல் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 33வது சதத்தை ரோகித் சர்மா பூர்த்தி செய்தார்.
அதுமட்டுமல்லாமல் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா மண்ணில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அதிக சதங்களை விளாசிய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார். ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா அடிக்கும் 6வது சதம் இதுவாகும். அதேபோல் சர்வதேச கிரிக்கெட்டில் 50 சதங்களை விளாசிய பெருமையையும் ரோகித் சர்மா படைத்துள்ளார். இதனால் ரோகித் சர்மாவின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.