சிட்னி: இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2வது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் நடக்கவுள்ளது. பிங்க் பால் டெஸ்ட் போட்டி என்பதால், இரு அணிகளின் வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். 2வது டெஸ்டில் வென்று இந்திய அணிக்கு பதிலடி கொடுக்க ஆஸ்திரேலியா வீரர்கள் மிகத் தீவிரமாக உள்ளனர். இந்த நிலையில் இந்திய வீரர்களுடன் கேப்டன் ரோஹித் சர்மா இணைந்திருக்கிறார்.
கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா தொடக்க வீரராக விளையாடி வருகிறார். ஆனால் முதல் டெஸ்ட் போட்டியில் தொடக்கம் கொடுத்த ஜெய்ஸ்வால் - கேஎல் ராகுல் இருவரும், 2வது இன்னிங்ஸில் 200 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து புதிய வரலாறு படைத்துள்ளனர். இதனால் தொடக்க கூட்டணியை மாற்றக் கூடாது என்று ரசிகர்களும், விமர்சகர்களும் கூறி வருகின்றனர்.

இதன் காரணமாக ரோஹித் சர்மா மிடில் ஆர்டரில் களமிறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. துருவ் ஜுரெல் விளையாடிய நம்பர் 6 பேட்டிங் வரிசையில் மட்டுமே ரோஹித் சர்மா களமிறங்க முடியும். தொடக்க காலத்தில் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா மிடில் ஆர்டரில் விளையாடி இருக்கிறார். இதனால் ரோஹித் சர்மா சமாளிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசுகையில், ரோஹித் சர்மாவிடம் ஆஸ்திரேலியா மண்ணில் விளையாடுவதற்கான போதுமான அனுபவம் இருக்கிறது. ரோஹித் சர்மாவை எந்த பேட்டிங் வரிசையில் பார்க்க ஆஸ்திரேலியா அணி விரும்பும்? அந்த பேட்டிங் வரிசையை தான் ரோஹித் சர்மா தேர்வு செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.
இந்திய அணியின் கேப்டன் என்பதால், அவரால் எளிதாக தனது பேட்டிங் வரிசையில் விளையாட முடியும். இந்திய அணியுடன் ரோஹித் சர்மா இணைந்திருப்பது கூடுதல் பலம் தான். அவரின் பேட்டிங் மற்றும் கேப்டன்சி தரத்தில் சந்தேகப்படுவதற்கு இடமே இல்லை. அவரிடம் அனுபவம் இருக்கிறது. அந்த அனுபவம் மிடில் ஆர்டரில் இந்திய அணிக்கு தேவையாக உள்ளது.
ரோஹித் சர்மா மிடில் ஆர்டரில் வரும் போது இளமையும், அனுபவமும் இணைந்த சரியான கலவையாக இருக்கும். தொடக்க வீரர் அல்லது மிடில் ஆர்டர்.. எந்த பேட்டிங் வரிசையில் விளையாடினாலும், முடிவு அவரின் கைகளில் உள்ளது. என்னை பொறுத்தவரை கேஎல் ராகுல் தொடக்க வீரராக தொடர வேண்டும். ஏனென்றால் ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவில் போதுமான நேரம் செலவிடவில்லை.
பிரைம் மினிஸ்டர் பிளேயிங் லெவனுக்கு எதிராக ரோஹித் சர்மா மிக குறைவான நேரத்தில் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் இந்திய பேட்டிங் வரிசையில் மாற்ற செய்ய தேவையில்லை. அவரை நம்பர் 5 அல்லது 6ல் விளையாட வைக்கலாம். அதுமட்டுமல்லாமல் இளம் வீரரான சுப்மன் கில்லும் தயாராக இருப்பதால், இந்திய அணியின் பலம் மேலும் அதிகரித்துள்ளது.
கடந்த 10 முதல் 15 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அனைத்து அணிகளின் பேட்டிங் ஆர்டரை கணக்கில் கொண்டாலும், இந்த இந்திய அணியின் பேட்டிங் வரிசை தான் பலமானதாக இருக்கும். ஏனென்றால் இந்த வீரர்களிடம் அனுபவம் உள்ளது. படிக்கல் மற்றும் ஜுரெல் இருவருக்கும் பதிலாக சுப்மன் கில் மற்றும் ரோஹித் களமிறங்கலாம் என்று தெரிவித்துள்ளார்.