அடிலெய்டு: இந்திய கிரிக்கெட் அணியின் 'ஹிட்மேன்' ரோஹித் சர்மா, ஒருநாள் கிரிக்கெட்டில் இன்னொரு இமாலய மைல்கல்லை எட்டியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் ரன் சாதனையை முறியடித்து, ஒருநாள் போட்டிகளில் இந்தியாவிற்காக அதிக ரன்கள் குவித்த மூன்றாவது வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார்.
அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டி தொடங்குவதற்கு முன்பு, சவுரவ் கங்குலியின் 11,221 ரன்கள் என்ற சாதனையை முறியடிக்க ரோஹித் சர்மாவுக்கு 46 ரன்கள் தேவைப்பட்டது. கோலி, கில் ஆகியோரின் விக்கெட்டுகளுக்குப் பிறகு பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித், போட்டியின் 21வது ஓவரில் ஆடம் ஸாம்பா பந்துவீச்சில் ஒரு பவுண்டரி அடித்து இந்த வரலாற்று மைல்கல்லை எட்டினார்.
இதன் மூலம், இந்திய கிரிக்கெட்டின் ரன் மெஷின்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு அடுத்த இடத்தில் தனது பெயரைப் பதிவு செய்துள்ளார். சவுரவ் கங்குலி 308 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 11,221 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால், ரோஹித் சர்மா தனது 275வது போட்டியிலேயே இந்தச் சாதனையை முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சச்சின் டெண்டுல்கர்: 18,426 ரன்கள் (463 போட்டிகள்)
விராட் கோலி: 14,181 ரன்கள் (304 போட்டிகள்)
ரோஹித் சர்மா: 11,249 ரன்கள் (275 போட்டிகள்)
சவுரவ் கங்குலி: 11,221 ரன்கள் (308 போட்டிகள்)
ராகுல் டிராவிட்: 10,768 ரன்கள் (340 போட்டிகள்)
கங்குலியின் மொத்த ரன் சாதனையை முறியடித்தது மட்டுமல்லாமல், இதே போட்டியில் மேலும் இரண்டு முக்கிய சாதனைகளையும் ரோஹித் சர்மா நிகழ்த்தினார்.
ஆஸ்திரேலிய மண்ணில் 1000 ரன்கள்: போட்டியின் தொடக்கத்திலேயே, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 1000 ஒருநாள் ரன்களைக் கடந்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்தார்.
தொடக்க வீரராக முதலிடம்: இந்தியாவிற்காக ஒருநாள் போட்டிகளில் தொடக்க வீரராக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் சவுரவ் கங்குலியை (9146 ரன்கள்) பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்தார்.
ஆட்டத்தின் தொடக்கத்தில் மிகவும் மந்தமாக ஆடி விமர்சனங்களைச் சந்தித்தாலும், பின்னர் நிதானமாக நிலைத்து நின்று அணியை சரிவிலிருந்து மீட்டதோடு, இந்த சாதனைகளையும் நிகழ்த்தி, தனது அனுபவத்தையும், திறமையையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் ரோஹித் சர்மா. அவர் 97 பந்துகளில் 73 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.